ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள்: திமுகவை மறைமுகமாக விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் இந்தியை திணிப்பதாகக்கூறி அரசியல் செய்வதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

குமரிமாவட்டம், வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடம் சார்பில் சமய வகுப்பு மாணவர்களுக்கான வித்யா ஜோதி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். “தமிழகத்தில் ஆன்மிகம் மற்றும் இந்துதர்மத்தைப் பற்றிப் பேசுவது ஏதோ தவறான விசயம்போலவும், பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் அகற்றப்பட வேண்டும். குமரியில் நம் பலத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆன்மிகம் தான் நம் பலம். இந்த பலம் மற்ற இடங்களிலும் வரவேண்டும்.

காவியினுடைய பலம் கருப்பினால் மறைந்துவிடக் கூடாது. ஆளுநர் இப்படிப் பேசலாமா எனக் கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள். அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையும், மதிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் பண்பாட்டை, பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுப்பதில் என்ன தவறு? நாம் ஏதாவது பேசினால் இவர்கள் எப்படிப் பேசலாம் எனக் கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர். வேறு யார் பக்கமும் இந்த அம்பு எய்தப்படுவதில்லை” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழிசை செளந்தர்ராஜன், “மத்திய அரசு எங்குமே இந்தியைத் திணிக்கவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்கிறார்கள். அதில் மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதை வைத்து மட்டுமே, அரசியல் செய்யமுடியும் என இதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தமிழ், தமிழ் எனச் சொல்கிறோம். இன்று மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் தாய்மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுபோல முயற்சித்து தமிழில் இங்கு கொண்டு வந்திருக்கலாமே?

தமிழ்மொழிக் கல்வியை ஊக்குவிக்க தேசியக் கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா? என்கிறார்கள். பிரதமர் திருக்குறள் சொன்னால், திருக்குறள் மட்டும் சொன்னால் போதுமா என்கிறார்கள். முந்தைய பிரதமர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள்? ” என கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in