ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம்.

‘ஒருங்கிணைப்பாளர் நான்தான்... ஒன்றிணைவோம் வாருங்கள்’ - ஓபிஎஸ் அறைகூவல்!

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான். அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சாத்தும் வகையில் அறக்கட்டளைக்கு இன்று வெள்ளிக்கவசம் வழங்கியுள்ளோம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றிணைவோம்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

பசும்பொன்னில் இன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தொடந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அவர் பேசுகையில், “அதிமுக சார்பில் நாங்கள் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இந்த புண்ணிய பூமிக்கு வருகின்றபோதெல்லாம் இதை நினைவூட்டும்விதமாகவே கூடும் கூட்டம் இருக்கிறது. அடித்தட்டு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடியவர் ஐயா. இந்திய விடுதலைப் போரில் சிறையில் வாழ்ந்த தெய்வமகன் அவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்துமே இந்திய நாடு ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டவை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “குருபூஜை நடக்கும் நன்னாளில் ஐயாவுக்கு சாத்த வேண்டும் என்று 13 கிலோ தங்கக் கவசத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். பொருளாளராக இருந்த என்னையும், திருக்கோயிலின் அறங்காவலராக இருக்கின்ற பெரியம்மா காந்தி மீனாவையும் இந்தப் பணியை மேற்கொள்ள ஜெயலலிதா பணித்திருந்தார். அந்த அடிப்படையில் தங்கக்கவசத்தைக் கொண்டுவந்து சாத்திவிட்டு, குருபூஜை முடிந்ததும் எடுத்துச் சென்று மீண்டும் வங்கியில் வைக்கும் வழக்கம் இருந்தது. 2014-ம் ஆண்டும், இந்த ஆண்டும் எதிர்பாராதவிதமாக அந்த நிகழ்வு தடைபடும் ஒரு சூழல் ஏற்பட்டது.

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான் தங்கப்பெட்டகம் வைத்திருக்கும் வங்கியில் இந்தப் பிரச்சினை தீர்வுக்கு வர வேண்டும் என்றால் ஆட்சியரிடம் இந்தத் தங்கக்கவசத்தைக் கொடுத்து குருபூஜைக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும்போல் சாத்தப்பட வேண்டும் என 25 நாள்களுக்கு முன்பே கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் தற்காலிகப் பொருளாளர் நான் தான் எனச் சொல்லிக்கொண்டு உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார். அந்த வழக்கை நாங்களும் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. குருபூஜைக்குத் தங்கக் கவசம் உரிய நேரத்தில் செல்வதே முறையான செயலாக இருக்கும் என நாங்கள் கடிதம் கொடுத்த பின்பும், அவர்கள் ‘எங்களிடம்தான் தங்ககவசத்தை கொடுக்க வேண்டும் எனச் சொன்னார்கள். ஆனால் மதுரை உயர் நீதிமன்றம், இந்தத் தங்கக் கவசம் அறக்கட்டளைத் தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தரவேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு வழங்கியது. இப்போது அதிமுக சார்பில் நாங்கள் வெள்ளிக்கவசம் வழங்கியிருக்கிறோம். இதை அறக்கட்டளை நிர்வாகி தன் முழுப்பொறுப்பில் வைத்துக்கொண்டு விசேச நாள்களில் அவரே இதை சாத்திக்கொள்ளலாம். அறக்கட்டளைக்கே இதை வழங்கிவிட்டோம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். இதை அதிமுக சார்பிலேயே வழங்கியிருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இணைய வேண்டும்” என்று ஓ.பன்னீசெல்வம் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in