
"அண்ணாமலை மிகப்பெரிய மனிதர். அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை" என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்று ஈரோடு மாநகராட்சியில் உள்ள கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "திருமகன் ஈ.வே.ரா விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து இத்தொகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகநான் போட்டியிடுகிறேன். ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சாய கழிவுநீர் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பேன்.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணி தொடர்பாக இரு அணிகளை சேர்க்க அண்ணாமலை முயற்சித்து வருகிறார் என்கிறீர்கள். இந்த நேரத்தில் எதற்கு அவரைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அண்ணாமலை மிகப்பெரிய மனிதர். அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை" என்றார்.