பாஜக எங்களோடு வராவிட்டாலும் மகிழ்ச்சி தான்!

அதிமுக அமைப்புச் செயலாளர் தளவாய் சுந்தரம் அதிரடி
தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்பாஜக வராவிட்டாலும் மகிழ்ச்சிதான்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

“பிப்ரவரி 3-ம் தேதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்” என அறிவித்திருந்த ஈபிஎஸ், அதை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். இப்படியான அரசியல் சூழலில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் காமதேனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்துக்கு வந்துள்ள சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் அதுபற்றி விரிவாக பேச இயலாது. தேர்தல் ஆணையம் பதிம் மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசியாக நடந்த பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. நீதிமன்றத்தில் அது தொடர்பான வாத, பிரதிவாதங்கள் நடந்துவருகிறது. அதன் முடிவு தெரிந்த பின்பே விரிவாகப் பேச இயலும்.

சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்துப் போடத் தயார் என்று ஓபிஎஸ் சொல்கிறாரே?

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியாகிவிட்டது. அவரிடம் ஒருங்கிணைப்பாளர் பதவியும் இப்போது இல்லை. அவர் இப்போது வாய்ச்சவடாலாக இப்படிப் பேசி சுற்றிவிட்டுப் பார்க்கிறார். நான் கையெழுத்துப் போடத் தயார் என்றால், கையெழுத்துப் போட்டால் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிடலாம் என்கிற பதவி ஆசையில் இப்படிப் பேசுகிறார். அவரது திட்டம் பலிக்காது.

முதலில் தர்ம யுத்தம் தொடங்கினார். அடுத்து, கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டார். தர்மயுத்தம் ஆரம்பிக்கும்போது டிடிவி தினகரனை போய்ச் சந்தித்தார். முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்றார். ஆட்சி போனதும் எதிர்கட்சித் தலைவர் பதவியும் தனக்கு வேண்டும் என்றார். பொதுக்குழுவுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கக்கூடாது என நீதிமன்றத்திற்கும் சென்றார். கடைசியாக, கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்றார். எப்படியாவது தலைமைப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என பின்வாசல் வழியாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

கட்சிக்கு துரோகம் செய்து, கட்சி அலுவலகத்தை உடைத்து துவம்சம் செய்து இரட்டை இலையை முடக்கியவர் ஓபிஎஸ். சின்னத்தை முடக்குவது அவருக்கு ஒன்றும் புதிது அல்ல. ஓபிஎஸ், தான், தன் மகன், குடும்பம் என இயங்கும் சுயநலவாதி. அதிமுகவைப் பற்றி எள் முனையளவும் அவருக்குக் கவலை கிடையாது. இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இல்லை. 2001-ல் தான் அதிமுகவுக்கே ஓபிஎஸ்அறிமுகம். அம்மாவுக்கே இன்னொருவர் சொல்லித்தான் அவருக்கு அமைச்சர் பதவியே கிடைத்தது. அவர் இப்படி வித, விதமாக ஏதேனும் அஸ்திரம் எடுத்து வீசுவார். ஆனால், அது புஸ்வாணமாகத்தான் போகும்.

அதிமுக ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்குழுவில் வைத்த பேனர் கூட சர்ச்சையாகிவிட்டதே... பாஜகவோடு பிரச்சினையா?

நாங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளிடமும், ‘வேட்பாளரை அறிவிக்கப் போகிறோம்’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்துப் பேசினோம். பாஜகவிடமும் போய்க் கேட்டோம். பதில் சொல்லவில்லை. பார்க்கலாம் எனச் சொன்னார்கள். எங்களுக்கு தேர்தல் வேலைசெய்யும் தொண்டர்கள் வேட்பாளரை விரைந்து அறிவிக்க வலியுறுத்துகிறார்கள். எங்கள் வேட்பாளர் இருமுறை எம்எல்ஏ-வாக இருந்தவர். இயல்பாகவே தொகுதிக்குள் அவருக்கு நல்லபெயர் இருக்கிறது. அவரை அறிவித்திருக்கிறோம்.

ஆனால், நாங்கள் கமலாலயத்தில் காத்துக்கிடப்பதாக எதிர்கட்சிகள் கிளப்புகிறார்கள். இன்னும்கூட கெட்டுப்போகவில்லை. பாஜக எங்களுடன் வந்தால் மகிழ்ச்சி. கூட்டணிக்கு வராவிட்டாலும் வருத்தம் ஒன்றும் இல்லை. அதுவும் மகிழ்ச்சிதான்!

ஈரோடு கிழக்கில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை பெறவே பாஜகவை தனித்துவிடுவதாக பேச்சு எழுகிறதே?

அதில் உண்மை இருந்தால் பாஜக அலுவலகத்திற்கே சென்றிருக்க மாட்டோமே! எங்களைப் பொறுத்தவரை ஜனநாயக முறைப்படி கூட்டணிக் கட்சிகளிடம் கேட்டோம். ஜி.கே.வாசனை அணுகினோம். சம்மதித்தார். கிருஷ்ணசாமியையும், பூவை ஜெகன்மூர்த்தியையும் சந்தித்தோம். சரி என சம்மதித்தார்கள். மற்றவர்கள் ஆலோசித்துச் சொல்வதாகச் சொன்னார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கம் இது. உடனே வேட்பாளரை அறிவித்தோம். மீண்டும், மீண்டும் சொல்கிறேன். இடைத்தேர்தல் கூட்டணிக்குள் பாஜக வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டாலும் மகிழ்ச்சிதான்!

டிடிவி தினகரன் ஒருசிலர் சுயநலத்திற்காக அதிமுகவை சிதைப்பதாகச் சொல்லியிருக்கிறார் கவனித்தீர்களா?

எங்கள் பக்கம் யாருக்கும் சுயநலம் இல்லை. கட்சி வளர வேண்டும். தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என இலக்கு கொண்டவர்கள் ஓரணியில் நிற்கிறோம். முதன் முதலில், முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை நீக்கியது சசிகலா. கட்சியை உடைக்க மூலக்காரணமே அவர்தான். அடுத்து அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர்த்திவிட்டுச் சென்றார். அதை சசிகலா தன் சுயநலத்திற்காக செய்தார். அது தோற்றுப்போனது.

எடப்பாடி முதல்வர் ஆனதும், அவரை நீக்கச்சொல்லி மீண்டும் அவர்களின் சுயநலத்திற்காக கவர்னரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மனு கொடுத்தனர். அவர்கள் குடும்பம் தான் அதிமுக என நினைத்தார்கள். அது அவர்களின் சுயநலம்! அதை உடைத்து எரிந்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக வந்துவிட்டார்.

ஓபிஎஸ்ஸை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாகவும், அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவும் காரணம் எனவும் பேச்சுவருகிறதே?

நாங்கள் ஒருகட்சி, ஒரு தலைமை என்னும் கொள்கையில் போய்க் கொண்டிருக்கிறோம். இங்கே ஓபிஎஸ்ஸும் டிடிவியும் முதல்வராவதற்கும், சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கும் ஆசைப்படுகிறார்கள். நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று செயல்படுகிறோம்.

நாங்கள் வேட்பாளரையே அறிவித்துவிட்டோமே! பாஜக எங்கே குழப்பம் செய்தார்கள்? அதிமுக எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம். அதை இன்று எடப்பாடி பழனிசாமி வழிநடத்திச் செல்கிறார். எங்களை எந்த கட்சியும் கட்டுப்படுத்தவில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது.

படம் உதவி: ஜாக்சன் ஹெர்பி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in