நாட்டுக்குச் சேவையாற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன்: பதவி விலகல் கடிதத்தில் ஆசையைத் தெரிவித்த கோத்தபய ராஜபக்ச

நாட்டுக்குச் சேவையாற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன்: பதவி விலகல் கடிதத்தில் ஆசையைத் தெரிவித்த கோத்தபய ராஜபக்ச

நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்த நிலையில் சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச, தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. அதில் கோத்தப ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்த கடிதத்தில், அதிபராக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையைக் கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோத்தபய குறிப்பிட்டுள்ளார். மேலும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை. நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என கோத்தபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் இலங்கையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in