நான் ஒரு காஷ்மீர் பண்டிட்: வைரல் ட்வீட்டுக்கு ஹார்ட்டின் விட்ட பிடிஆர்

நான் ஒரு காஷ்மீர் பண்டிட்: வைரல் ட்வீட்டுக்கு ஹார்ட்டின் விட்ட பிடிஆர்

பிரதமர் மோடி முதல் உள்ளூர் எச்.ராஜா வரையில் கொண்டாடுகிற படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் பல, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை தந்து ஊக்கப்படுத்தி வருகிறது. 1990களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களை குறிவைத்து இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் காஷ்மீரைவிட்டே வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது என்று பாஜகவினர் விளம்பரம் செய்வதால், ஒரே வாரத்தில் சுமார் 90 கோடி வசூலை அள்ளியிருக்கிறது இந்தப் படம்.

காஷ்மீர் பண்டிட்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள், விரட்டப்பட்டார்கள் என்பது பொய் என்று கூறிவரும், எதிர்க்கட்சியினர் இதேபோல குஜராத் ஃபைல்ஸ், லக்கீம்பூர் கெரி ஃபைல்ஸ் திரைப்படங்கள் வெளியானால், பாஜக அரசு இதேபோல கொண்டாடுமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன.

இந்தச் சூழலில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமேஸ் தலாமி என்பவர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், "நானொரு காஷ்மீர் பண்டிட். எனது தந்தை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளானதுடன், ஒருமுறை தாக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்டார். அவர்கள் அவரை 4 நாட்கள் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக ஒளித்துவைத்து, ஜம்முவுக்கு அழைத்துச்சென்றார்கள். காரணமே இல்லாமல், எங்களுக்கு அப்படியான துன்பம் நேர்ந்தது துரதிருஷ்டமானது. அதற்காக எல்லா காஷ்மீர் முஸ்லிம்களையும் பொறுப்பாக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

அந்த ட்வீட்டை இதுவரையில் 32 ஆயிரம் பேர் லைக் செய்திருப்பதுடன், 8200 பேர் ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் நபர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிராமணரான அமெரிக்கை நாராயணன் ஆகியோரும் அந்த ட்வீட்டுக்கு ஹார்ட்டின் விட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.