நான் ஒரு விவசாயி; எனக்கு சொந்தமாக கார்கூட கிடையாது - சந்திரசேகர் ராவின் சொத்துகள் இதுதான்!

நான் ஒரு விவசாயி; எனக்கு சொந்தமாக கார்கூட கிடையாது - சந்திரசேகர் ராவின் சொத்துகள் இதுதான்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில், தான் ஒரு விவசாயி எனவும், தனக்கு சொந்தமாக கார் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் நவம்பர் 30ம் தேதி, அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கே.சி.ஆர் முனைப்பு காட்டி வருகிறார்.

இதனால், கஜ்வேல் மற்றும் கமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் கே.சி.ஆர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கே.சி.ஆர், தன்னுடைய சொத்து விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தன்னுடைய கட்சி சின்னம் காராக இருந்தாலும் கே.சி.ஆரின் பெயரில் ஒரு கார் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால், குடும்ப சொத்தாக 14 வாகனங்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். அவை அனைத்துமே வேளாண் தொழிலுக்காக முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது என தேர்தல் விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 2ம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார். இது, 2018ம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் காட்டிய 5.63 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

அவரது மனைவி கல்வகுந்த்லா ஷோபா பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள், 2018ம் ஆண்டில் 94.59 லட்சம் ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை தவிர்த்து, 2.8 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளிட்ட நகைகளை சொந்தமாக வைத்துள்ளார். இதன் மதிப்பு 1.49 கோடி ரூபாயாகும். இதன் மூலம், மொத்த அசையும் சொத்துக்கள் 7.78 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 9.81 கோடி ரூபாயாகும்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

கே.சி.ஆருக்கு 17.27 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் அவரது குடும்பத்துக்கு 7.23 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ஜூலை மாதம், சித்திப்பேட்டை மாவட்டம் மார்கூக் மண்டலம் வெங்கடாபூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை 28.47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கினார்.

இதன் மூலம், 53.3 ஏக்கர் நிலம், கே.சி.ஆரின் குடும்பத்தின் பெயரில் உள்ளது. அதன் மொத்த மதிப்பு 1.35 கோடி ரூபாயாகும். தேர்தல் பத்திரத்தில் தான் ஒரு விவசாயி என்றும், கல்வி தகுதி பி.ஏ. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவை அனைத்தும் தெலங்கானா மாநில போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in