'நான் முதல்வர், நாட்டை விட்டு ஓடிவிடுவேனா?' - அமலாக்கத்துறை சம்மன் குறித்து ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

நான் இன்று சம்மனை எதிர்கொள்ளப் போகிறேன். இந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோத சுரங்க வழக்கு விசாரணைக்காக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். "நான் ஒரு முதலமைச்சர். ஒரு முதல்வர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை எப்படி இவ்வளவு சாதாரணமாகக் கொண்டு வர முடியுமா என்று நான் அதிர்ச்சியடைகிறேன். நான் முதல்வர், நாட்டை விட்டு ஓடிவிடுவேனா?. கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுரங்கம் தோண்டியதில் கிடைத்த மொத்த ராயல்டி வருமானம் சுமார் ரூ.750 கோடி என்று EDக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அப்படியிருக்கையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?.

ஜார்க்கண்ட் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி இதுவரை மறைமுகமாகச் செயல்பட்டது, இப்போது சதித்திட்டம் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார்.

ஹேமந்த் சோரன் ஆஜராவதை முன்னிட்டு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டனர். சோரன் முதலில் நவம்பர் 4 அன்று அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைக்கப்பட்டார். ஆனால் சத்தீஸ்கர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் திருவிழாவில் கலந்துகொள்வதை மேற்கோள் காட்டி அவர் ஆஜராகவில்லை. அப்போது அவர் விசாரணைக்கு சம்மன் அனுப்புவதற்கு பதிலாக தன்னை கைது செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்தார். இந்த வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறும் ஹேமந்த் சோரன் கோரிக்கை வைத்தார்.

இன்று விசாரணைக்கு ஆஜராகும் முடிவினை எடுத்த சோரன் அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதத்தில், “அமலாக்கத்துறை தனது விசாரணையை எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரல் அல்லது உள்நோக்கம் இல்லாமல் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், இதில் நேர்மையான குடிமகனாக எனது கடமைகளை நிறைவேற்றவும் நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். எனவே எனக்காக அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு இணங்க நான் இன்று உங்கள் அலுவலகத்தில் ஆஜராகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கில் தொடர்புடைய பணமோசடி விசாரணைக்காக அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in