தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூப வளர்ச்சி... யார் இந்த ரேவந்த் ரெட்டி?

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் 2019 மக்களவைத் தேர்தல் பிஆர்எஸ் - பாஜக இடையேதான் இருந்தது. இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதுதான் சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு முந்தைய நிலைமை. ஆனால், இப்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்கின்றன பல்வேறு கருத்து கணிப்புகள். பூஜ்ஜியமாக இருந்த காங்கிரஸை ராஜ்ஜியத்தை நோக்கி நகர்த்தும் ரேவந்த் ரெட்டி யார் என பார்ப்போம்.

ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் என்பது காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. ஆந்திராவில் என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் விஸ்வரூபம் எடுத்திருந்த போதும் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உயிர்ப்புடனும் வலிமையுடனும் இருந்தது.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியை இந்த மாநிலங்களில் தேடும் நிலைமைதான். ஆந்திராவில் காங்கிரஸின் முகமாக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியை ஓரம்கட்டியது, அவரது மறைவுக்கு பின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை காலி செய்து தனிக்கட்சி தொடங்க வைத்தது ஆகியவை ஆந்திராவில் காங்கிரஸை இல்லாமல் செய்துவிட்டது. தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததும் காங்கிரஸின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டது.

தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் (பிஆர்எஸ்) 63; காங்கிரஸ் 21; தெலுங்குதேசம்15 இடங்களில் வென்றன. அதன்பின்னர் 2018 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு வெறும் 19 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால் இதற்கு மாறாக 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் டிஆர்எஸ் 9 இடங்களில் வெல்ல, பாஜக 4 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது பாஜக. இந்த தேர்தலில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஓவைசி கட்சி ஒரு தொகுதியிலும் வென்றது. அதற்கடுத்து நடந்த ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வென்றது. இதனால் தெலங்கானா அரசியல் களம் பிஆர்எஸ் - பாஜக என்பதுபோல மாறியது.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

ஆனால் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் விஸ்வரூபம் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கின்றன சில கருத்து கணிப்புகள். இந்த விஸ்வரூபம் காங்கிரஸ் கட்சியினரே எதிர்பார்க்காத ஒன்றுதான். இதற்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுபவர் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் ரேவந்த் ரெட்டிதான்.

யார் இந்த ரேவந்த் ரெட்டி?: தெலங்கானாவில் காங்கிரஸின் இந்த அசுர வளர்ச்சியின் காரணகர்த்தாவாக ரேவந்த் ரெட்டி பார்க்கப்படுகிறார். ரேவந்த் ரெட்டி. இவர் இந்த தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே கோடங்கல் தொகுதி வேட்பாளராகவும் ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டிருந்தார். தெலுங்கானா தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவைப் போல 2 தொகுதிகளில் களம் காணுகிறார் ரேவந்த் ரெட்டி. இவர்தான் தெலுங்கானா காங்கிரஸின் 'அறிவிக்கப்படாத' முதல்வர் வேட்பாளர்.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

இதில் சுவாரசியம் என்னவெனில் ரேவந்த் ரெட்டி தமது அரசியல் பயணத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்துதான் தொடங்கினார். 2007-ல் சுயேட்சையாக எம்.எல்.சியானார். இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து 2009-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அப்போது ரேவந்த் ரெட்டி வீழ்த்தியது 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் ஜாம்பவான் குருநாத் ரெட்டியை. அதனால் ரேவந்த் ரெட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2014 தேர்தலிலும் இதே அதகள வெற்றி பெற்றதால் தெலங்கானா சட்டசபையில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரானார்.

2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ரேவந்த் ரெட்டி, 2018 தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தைப் பெற்றார். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் ரேவந்த் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து அவரை செயல் தலைவர்களில் ஒருவராக்கியது. 2019 லோக்சபா தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதி எம்.பி.யானார். 2021-ல் தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் நியமித்தது.

ரேவந்த் ரெட்டி ராகுல் காந்தி
ரேவந்த் ரெட்டி ராகுல் காந்தி

இப்போது ரேவந்த் ரெட்டி தலைமையில்தான் தெலங்கானா மாநில காங்கிரஸ் புத்துயிர் பெற்று அரியணை நோக்கி நகருகிறது. அதுவும் 2 முறை முதல்வர் பதவி வகித்த சந்திரசேகர் ராவை வீழ்த்த கமரெட்டி தொகுதியில் களம் காண்கிறார் ரேவந்த் ரெட்டி. தெலங்கானா தேர்தலில் அதிஉச்ச கவனம் பெற்ற தொகுதியாக கமரெட்டி உருவெடுத்திருக்கிறது. இவர் ஒரே நேரத்தில் கமரெட்டி தொகுதியையும், தெலங்கானா முதல்வர் பதவியையும் சந்திரசேகர் ராவிடமிருந்து தட்டி பறிப்பாரா என்பது டிசம்பர் 3-ல் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in