பாரத மாதாவுக்கு குடும்பக்கட்டுப்பாடா செய்திருக்கிறோம்?: சர்ச்சை பேச்சில் சிக்கிய எச்.ராஜா

பாரத மாதாவுக்கு குடும்பக்கட்டுப்பாடா செய்திருக்கிறோம்?:  சர்ச்சை பேச்சில் சிக்கிய எச்.ராஜா

கோவையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜாவின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய உறுப்பினர் எச். ராஜா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய எச். ராஜா, “பட்டாசு, பொம்மை தொடங்கி சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் வரை எல்லாமே தரமற்றவைதான். ஆனால் கரோனா வைரஸ் மட்டும் உலகத்திற்குக் கொஞ்சம் டேஞ்சராகப் போய் விட்டது. ரஷ்யாவைப் போல சீனாவிலும் இரும்புத் திரை ஒரு நாள் விலகும். மோடி மட்டும் பிரதமராக இல்லையென்றால் 50 கோடி பேர் கரோனாவால் இறந்திருப்பார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவர் அடுத்த முதல்வராக தமிழ்நாட்டில் வர விடமாட்டோம் என நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்து விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நீங்க கல்யாண ராமனை உள்ளே வச்சீங்க. வெளியில வந்து அவர் சும்மா இருக்காரா? அதே போல கிஷோர் கே.சாமியை குண்டர்கள் சட்டத்தில் உள்ளே வச்சீங்க. பாவம், அவர் ஒல்லியா காத்தடிச்சா பறந்துடற மாதிரி இருக்கார். ஏதாவது ஒல்லியர் சட்டம்னு ஒரு சட்டத்தையாவது கொண்டு வாங்க. இப்ப அவரை உங்களால் அடக்க முடிஞ்சுதா? முன்பைவிட அதிகமா ஸ்டாலினை விமர்சனம் செய்கிறார்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்வார்கள். சிவனுடைய வீட்டிற்கு தெற்கு பகுதியில் உள்ள பாரதம் முழுவதும் சிவன் ஆளுகின்றான் என்று பொருள். நம்மைப் பொருத்தவரை இறைத் தூதர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். இனிமேல் இறைத் தூதர்கள் பிறக்கக் கூடாது என நாம என்ன பாரதமாதாவுக்கு குடும்பக் கட்டுப்பாடா செய்திருக்கிறோம். இந்து விரோத சக்திகள் இன்று சுதந்திரமாகத் திரிகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து 20 சதவிகித இடத்தை தனியாகக் கேளுங்கள் என பாதிரியார் ஜகத்கஸ்பர் சொல்கிறார். ஐ.நா. சபையில் பாதிரியார் ஜெகத்கஸ்பருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த விவரங்களை அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பிவிட்டேன். இந்த அரசாங்கம் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் ” என்றார். பல்வேறு சர்ச்சைப் பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான எச்.ராஜா, பாரத மாதா குறித்து பேசிய இந்த சர்ச்சை பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in