நான் அறநிலையத் துறை அமைச்சரானால்...

எச்.ராஜா அதிரடி பேட்டி
நான் அறநிலையத் துறை அமைச்சரானால்...
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

எந்த ஒரு விவகாரத்தையும் பெரும் அரசியல் பிரச்சினையாக மாற்றும் வல்லமை கொண்ட எச்.ராஜாவுக்கு, தொக்காக வந்து மாட்டியிருக்கின்றன பொங்கல் பரிசுப் பொருட்கள் பிரச்சினையும், தஞ்சை மாணவி தற்கொலைப் பிரச்சினையும். இவற்றை வைத்து அரசியல் சமூகக் களத்தில் அதிரடியான கருத்துகளை வெளியிட்டிருக்கும் அவரை ’காமதேனு’ பேட்டிக்காக போனில் பிடித்தேன். அந்த உரையாடல் இங்கே.

உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. தேச பக்தரான உங்கள் கருத்து என்ன?

பாதுகாப்புத் துறை சார்பில் அமைக்கப்படும் குழுதான், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளைத் தேர்வுசெய்கின்றன. இந்தியா குடியரசான நாளிலிருந்து இதுதான் நடைமுறை. எல்லா ஆண்டுகளும் எல்லா மாநிலங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தும்கூட, 2009, 2014-ல் மட்டும்தான் தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகள் பங்கேற்றிருக்கின்றன. மற்ற ஆண்டுகளில் எல்லாம் என்ன காரணத்தால் தமிழக ஊர்தி பங்கேற்கவில்லையோ, அதே காரணத்தால்தான் இந்த ஆண்டும் பங்கேற்கவில்லை. இதில் பாரபட்சம் ஏதுமில்லை. ஆனால், வேண்டுமென்றே திமுக அரசு இதை அரசியலாக்குகிறது. பொங்கல் தொகுப்பில் நடந்துள்ள ஊழலை மறைக்க, இந்தத் திசைதிருப்பும் வேலையைச் செய்கிறார்கள் என்று நான் சொல்றேன். அந்த அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார், மருதுபாண்டியர், வ.உ.சி தவிர வேறு யார் யாருடைய படங்கள் இருந்தன என்ற விவரத்தையும் தமிழக முதல்வர் வெளியிட வேண்டும். ஏனென்றால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள், வெள்ளையனே தொடர்ந்து இந்தியாவை ஆள வேண்டும் என்று சொன்னவர்களின் படங்களும் ஊர்தியில் இருந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

‘வ.உ.சி ஒரு வணிகர்’, ‘கட்டபொம்மனையும், மருது சகோதரர்களையும் மற்றவர்களுக்குத் தெரியாது’, ‘வேலு நாச்சியாருக்கு வெள்ளைக்குதிரை எதற்கு? என்று சொல்லியே அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக சு.வெங்கடேசன் கூறியிருக்கிறாரே?

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதுகூட தெரியாமல், அதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட அதிபுத்திசாலி அவர். தன்னுடைய ஊரைப் பற்றியும், தொகுதியைப் பற்றியுமே எதுவும் தெரியாத அவரிடம் இருந்து, இந்த விஷயத்தில் அறிவுபூர்வமான அறிக்கையை எதிர்பார்க்க முடியுமா? அறிவுக்கு ஒப்பாத விஷயங்களைப் பேசி கலாட்டா செய்வதே அவர் வேலை.

இல்லை. மதுரை விமான நிலையம் உள்ளூர் விமான நிலையமும் இல்லை, சர்வதேச விமான நிலையமும் இல்லை. இரண்டுக்கும் இடையில் சுங்க விமான நிலையமாகத்தான் இருக்கிறது என்று தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பலரும் உறுதிப்படுத்திவிட்டார்களே?

மதுரைக்கு வெளிநாட்டு விமானங்கள் நேரடியாக வந்துபோகிறதா இல்லையா? அப்புறம் என்ன, நான் சொல்றேன்... மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம்தான்.

எடப்பாடி பழனிசாமியே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் என்றுதான் சொல்லியிருக்கிறார். நீங்கள் 1,000 கோடி என்கிறீர்களே எப்படி?

எல்லா விவரங்களும் வந்துவிட்ட காரணத்தால், கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் சொன்னேன். 50 கிராம் மிளகு எவ்வளவு? 40 ரூபாய் வரும். அதுக்குப் பதிலாக இவர்கள் கொடுத்த இலவம் பஞ்சுக் கொட்டை 40 பைசாதானே வரும்? மிளகாய்த்தூளுக்குப் பதில் மரத்தூள், வெல்லத்துக்குப் பதில் வேற எதுவோ கொடுத்தால்? பச்சரிசிகூட ரேஷனில் இலவசமாகக் கொடுக்கும் அரிசியைத்தான் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எல்லாப் பொருட்களையும் பார்த்துவிட்டுத்தான், 1,000 கோடி வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறேன்.

தொடர்ந்து 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுகவினர் எந்த ஊழலையும் செய்யவில்லையா? அதுபற்றி நீங்கள் வாய் திறக்கவே இல்லையே ஏன்?

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதமாகிறது. முதல் ஊழல் குற்றச்சாட்டை இப்போதுதான் சுமத்துகிறேன். ஏன் என்றால், உணவில் கலப்படம் செய்து, ஏழை எளிய மக்களின் உயிருக்கே உலைவைப்பது மனிதத்தன்மையற்ற செயல். ரேஷன் பொருட்களில் பல்லி, பாச்சா, ஊசி சிரிஞ்ச் எல்லாம் கிடந்ததாகச் சொல்கிறார்கள். அதை அப்படியே சாப்பிட்டிருந்தால் அவர்கள் கதி என்னாகும்? மக்கள் வயிற்றைக் கெடுத்தாவது தன் வயிற்றை நிரப்ப வேண்டும் என்று நினைப்பது மனிதத்தன்மையில்லாத செயல். எனவேதான் நான் குற்றம்சாட்டுகிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து?

ஆட்சிக்கு வந்தவுடன் சிலர் மேல வழக்குப் போட்டாங்களே என்ன ஆச்சு? ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடி படம் காட்டுவதற்காக அந்த ரெய்டுகளை நடத்தியபோது போல, இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகப் படம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். திமுகவுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது இருமுனைக் கத்தி. இங்கே 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறும். நீங்கள் இந்த விஷயத்தில் ரொம்பத் தீவிரம் காட்டினால், முன்னே பாய்ந்த வாய்க்கால் பின்னேயும் பாயும் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

தஞ்சை மாவட்ட மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் என்று நீங்களும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சொல்கிறீகள். ஆனால், அதை அந்த மாவட்ட எஸ்பி மறுத்துள்ளாரே?

இதுகுறித்து உண்மையை அறிய ஒரு டீம் போட்டிருக்கிறோம். அவர்கள் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று சொன்னார் எஸ்பி. பிறகேன், மதமாற்றம் ஒரு காரணமில்லை என்று இப்போதே சொல்கிறார்? நீ இந்த மாதிரிதான் அறிக்கை தர வேண்டும் என்று அந்த டீமுக்கு டைரக் ஷன் கொடுப்பது மாதிரி உயரதிகாரியே பேட்டி கொடுப்பது பொறுப்பற்றத்தனம். என்னைக் கேட்டால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பேன். இந்தப் பிரச்சினையை நாங்கள் சும்மாவிடப் போவதில்லை.

உங்களைப் போலவே உங்கள் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரமும், சித்திரை 1 தான் எனக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லியிருக்கிறாரே?

இது எல்லா தமிழர்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தானே! இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரி, கிறிஸ்தவர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு போல, இந்துக்களுக்கு சித்திரை 1 தான் புத்தாண்டு. அதை மாற்றுவதற்கு நாத்திகர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? அதனால் கார்த்தி சொன்னதை வரவேற்கிறேன்.

அறநிலையத் துறைக்கு இப்படியொரு அமைச்சர் வாய்த்ததேயில்லை என்றும், 1,689 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்டிருக்கிறார் என்றும் அமைச்சர் சேகர்பாபுவை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நீங்கள் மட்டும் தொடர்ந்து அறநிலையத் துறையை விமர்சிக்கிறீர்களே, ஏன்?

எதுக்குப் பாராட்டணுங்கிறேன். கோயில் ஆவணங்களைக் கணினிமயமாக்க மொத்தமே சில லட்சம்தான் ஆகும். ஆனா, பெரிய கோயில்களுக்கு 5 லட்சம், நடுத்தரக் கோயில்களுக்கு 3 லட்சம், சின்னக் கோயில்களுக்கு 2 லட்சம்னு, பல நூறு லட்சங்களை பொதுவான வங்கிக்கணக்குக்குப் போடச்சொல்லி உத்தரவு போட்டிருக்கார் சேகர் பாபு. அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு 108 சொகுசு கார் வாங்குறோம், கல்லூரி தொடங்குறோம்னு கோயில்களைப் பராமரிக்கக்கூட மிச்சம் வெக்காம காசை எல்லாம் எடுக்கிறாங்க. கோயிலுக்குச் சொந்தமா 4,28,000 ஏக்கர் நிலம் இருக்குதுன்னு சொல்லியிருக்கீங்களே, அதில் எந்தெந்த சொத்து கோயில் கட்டுப்பாட்டுல இருக்குது, எந்தெந்த சொத்துகள் வாடகை அல்லது குத்தகைதாரரிடம் இருக்கிறது, எந்தெந்த சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்று கேட்ட நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் இருக்கிற சொத்துகளை 6 வாரத்துக்குள் மீட்கச் சொல்லியும் உத்தரவு போட்டிருக்கிறது. உத்தரவு வந்து 6 மாதமாகிவிட்டது. அதை நிறைவேற்றாம, ஸ்டாலின், உதயநிதி வேட்டியைப் பிடிச்சிக்கிட்டுப் பின்னாடியே சுத்துறதுதான் அமைச்சரோட வேலையா? நான் மட்டும் அறநிலையத் துறை அமைச்சரா இருந்திருந்தா, ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்துலேயும் ஆய்வுக்கூட்டம் போட்டு, எந்தெந்தக் கோயிலுக்கு எந்தெந்த சொத்து இருக்குது? எத்தனை கோயில்கள் சேதமடைஞ்சிருக்கு, எத்தனை கோயில் முழுசா இடிஞ்சு போச்சு எல்லாத்தையும் எடுத்துண்டுவான்னு சொல்லி, அத்தனை அதிகாரிகளையும் வேலை வாங்கியிருப்பேன். அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்குத் தேவைக்கு அதிகமான அதிகாரங்கள் இருந்தும், எந்த வேலையையும் உருப்படியாச் செய்யலைன்னு கோர்ட்டே காறித் துப்பியிருக்குது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாம ரிவியு பெட்டிஷன் போடப் போறேன்னு சொல்ற அமைச்சரை, எப்படிப் பாராட்ட முடியும்? உங்க வேலையை நீங்களாவும் செய்ய மாட்டீங்க, நீதிமன்றம் உத்தரவு போட்டும் செய்ய மாட்டீங்கன்னா எதுக்கு அமைச்சரா இருக்கீங்கன்னு கேட்கிறேன்.

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்னு நினைக்கிறீங்க?

ஏற்கெனவே 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. திரும்பவும் வரும். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்குது. அங்கே காங்கிரஸ் காலியாகிடும்.

ஆனால், உபியில் அகிலேஷ்தான் வெல்வார் என்கிறார்களே?

முலாயம் சிங்கின் மருமகளே பாஜகவில் சேர்ந்துவிட்டார். அப்புறம் என்ன?

பாஜகவில் இருந்தும்தான் சில எம்எல்ஏக்கள் சமாஜ்வாதியில் சேர்ந்திருக்கிறார்கள்...

எந்தெந்த எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடம் அதிருப்தி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் சீட் கிடையாது என்று சொன்னதால, அவங்க அகிலேஷ்கிட்ட போயிருக்காங்க. நாங்க நிறுத்துனாலும் அவங்க தோற்கத்தான் போறாங்க. அகிலேஷ் நிறுத்துனாலும் தோற்கத்தான் போறாங்க. அவங்க எதிர்க்கட்சிக்குப் போனதால எங்க வேலை சுலபமாகியிருக்குது. அவ்வளவுதான். (சிரிக்கிறார்!)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in