ஏகவசனம் பேசும் எச்.ராஜா, பழனிவேல் தியாகராஜன்!

தரம் தாழ்கிறதா தமிழக அரசியல்?
ஏகவசனம் பேசும் எச்.ராஜா, பழனிவேல் தியாகராஜன்!

சமீபகாலமாக எச்.ராஜாவும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுவதைவிட, இன்னொரு தரப்பினரால் அதிகமாக ‘ட்ரோல்’ செய்யப்படுகிறார்கள். அதற்கு அவர்களது கரடுமுரடான சொற்பிரயோகமே முதன்மைக் காரணமாக இருக்கிறது.

பண்பை மறந்த பேச்சுகள்

தமிழகத்தில் பாஜக சார்பில் எந்தக் கூட்டம் நடந்தாலும், அதில் மற்ற தலைவர்களின் பேச்சைவிட எச்.ராஜாவின் பேச்சுக்குத்தான் பாஜகவினர் அதிகம் கைதட்டுகிறார்கள். மதுரையில் நடந்த தாமரை மாநாடாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இருந்தாலும் சரி.. . அங்கே நட்சத்திர நாயகனாக எச்.ராஜாவே இருக்கிறார். இதனால் கிடைக்கிற உற்சாகத்தால், மேலும் மேலும் வெறுப்பூட்டும் சொற்களைப் பிரயோகித்து, மோசமான அவதூறுகளைச் செய்வதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று கோயில்களில் சமபந்தி விருந்து நடத்தப்படுவதை சமீபத்தில் அவர் கண்டித்தார். "இந்துக் கோயில் வருமானத்தில் எதற்கு ஒரு திராவிடத் தலைவரை நினைவுகூர வேண்டும்?" என்று ஆதங்கப்பட, அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால், "இந்துக் கோயில் வருமானத்தில் எதற்கு அண்ணாதுரைக்கு 'தெவசம்' கொடுக்குறீங்க?" என்று கேட்பதெல்லாம், நாகரிக அரசியலுக்குக் கொஞ்சமும் ஒவ்வாதது; கண்டிக்கத்தக்கது என்றே சொல்ல வேண்டும்.

இதேபோல திமுகவிலும் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் போன்ற பல அமைச்சர்கள் திறம்படச் செயல்பட்டுவந்தாலும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு ‘ஹார்ட்டின்’ விடுவதற்கென்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. எச்.ராஜாவைப் பிடிக்காதவர்கள் எல்லாம் பழனிவேல் தியாகராஜனின் தடாலடிப் பேச்சைச் சிலாகிப்பதுடன், அப்படித்தான் பேச வேண்டும் என்றும் ஊக்கப்படுத்துகிறார்கள். விளைவு... ஒரு பண்பான அரசியல் குடும்பத்தின் வாரிசு, மெத்தப் படித்த மேதாவி, உலக வங்கிகளில் பணிபுரிந்த அனுபவஸ்தர், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் என்கிற பெருமைகளை எல்லாம் மறந்துவிட்டவர் போல, படிப்படியாக இறங்கிவர ஆரம்பித்துவிட்டார் தியாகராஜன். அவர் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணி பேச்சாளராக மாறிக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். கூடவே, சகிக்கவே முடியாத தற்பெருமை பேசுபவராகவும் உருவெடுத்திருக்கிறார். இவர்கள் இருவரின் செயல்பாடுகளும் அரசியல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

எச்.ராஜா
எச்.ராஜா

எல்லை மீறும் எச்.ராஜா

‘பிரிக்க முடியாதது எச்.ராஜாவும் சர்ச்சையும்’ என்று சொல்லலாம் போல. அவர் வாயைத் திறப்பதே ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தவோ அல்லது யாரையாவது தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசவோதான் என்று சொல்லுமளவுக்கு சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறார். உயர் நீதிமன்றத்தையே அவதூறாகப் பேசிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டு வழக்கிலிருந்து அவர் தப்பித்ததை மறந்துவிட முடியாது.

சமீபத்தில், 'ருத்ரதாண்டவம்' படத்தின் பிரிவியூ ஷோவுக்குச் சென்ற எச்.ராஜா கொடுத்த பேட்டி, பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. “அறிவாலயத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பிச்சை எடுக்கிறார் சுப.வீரபாண்டியன்" என்று பேசியதோடு மட்டுமின்றி, பத்திரிகைகள் குறித்தும் மோசமான கருத்தை வெளியிட்டார் அவர். "செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் எச்.ராஜா. அவரது இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்களும் எச்.ராஜாவின் விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது" என்று கண்டித்த சென்னை பத்திரிகையாளர் மன்றம், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜகவை வலியுறுத்தியுள்ளது.

"சுப.வீரபாண்டியன் அறிவாலயத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லியிருக்கிறார் எச்.ராஜா. இது என் தரத்தைக் காட்டவில்லை. சொல்லுகிற அவர் தரத்தைத்தான் காட்டுகிறது. இப்போதும் அவர் பெயர் குறிப்பிடுகிறபோது நான் உரிய மதிப்புடன்தான் சொல்வேன். என்ன காரணம் என்றால், அவருக்கு இணையாக என்னால் சாக்கடையில் இறங்கிச் சண்டை போட முடியாது. நான் கற்ற தமிழ் என்னை அதற்கு அனுமதிக்காது" என்று இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட சுப.வீரபாண்டியன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எச்.ராஜா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இறங்கிவரும் பழனிவேல் தியாகராஜன்

திமுகவில் சீனியர்களும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களும் அதிகமாக இருந்தபோதிலும் கை சுத்தம், குடும்பப் பின்னணி, பொருளாதார அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி அமைச்சர் பதவி கொடுத்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், கூட்டத்துக்குக் கூட்டம், பேட்டிக்குப் பேட்டி தன்னுடைய குலப் பெருமையைச் சொல்லி மகிழும் பழனிவேல் தியாகராஜன், தன்னுடைய கட்சித் தலைமைகள் காட்டி வந்த, வருகின்ற பொறுமையையும் கவனிக்க வேண்டும். அண்ணாவை எவ்வளவு கேவலமாக விமர்சித்தார்கள்? கருணாநிதி அளவுக்கு இழிவுபடுத்தப்பட்ட இன்னொரு தலைவர் உண்டா? மு.க.ஸ்டாலினை தேர்தல் நாள் வரையில் எப்படி எல்லாம் மலினப்படுத்தினார்கள்? அதற்கெல்லாம் அவர்கள் பதிலடி கொடுத்திருந்தால், முதல்வராகியிருக்க முடியுமா என்பதைக் கொஞ்சமாவது அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக கடைசியில், தன்னுடைய கட்சியின் மூத்த நிர்வாகியான டி.கே.எஸ்.இளங்கோவன் குறித்தும் காட்டமாக ட்வீட் செய்துவிட்டு, பின்னர் அகற்றிவிட்டதாக திமுகவினர் பலரே பழனிவேல் தியாகராஜன் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்நிலையில், ‘எங்க தாத்தா முதல்வர், எங்க அப்பா அமைச்சர் நான் மில்லியன் மைல் தூரம் விமானத்தில் பறந்தவன் என்று சொல்லிக்காட்டுவது தனக்கோ, தன் முன்னோருக்கோ பெருமை சேர்க்காது என்பதை அவர் உணர வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைப் போக்கில் இருந்து வேறுபட்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளாத மேல்தட்டுகளின், கார்ப்பரேட்களின் பிரதிநிதியாகவே அவர் செயல்படுகிறார்’ என்பது போன்ற விமர்சனங்களும் வரத் தொடங்கிவிட்டன.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

நம் தலைவர்கள் இப்படி இருக்கவில்லை

இவர்களின் இந்தப் போக்கு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, "இந்தியாவையே வழிநடத்தும் அளவுக்கும் பெரிய தலைவர்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வோ, கல்வியறிவோ இல்லாத காலகட்டத்தில், கடவுளைப் போல கொண்டாடப்பட்டும்கூட அவர்கள் பிற தலைவர்கள் யாரையும் தூக்கி எறிந்து பேசியதில்லை. புத்திமதியைக்கூட ரொம்ப அழகாகவும், கண்ணியமாகவும் தான் சொன்னார்கள். பெருந்தலைவர் காமராஜர் சில நேரங்களில் கண்டிப்புடன் பேசுவதுண்டு. அப்போதுகூட, ஒரு தந்தை மகனைக் கண்டிப்பது போன்ற அக்கறையுடன்தான் பேசுவாரே தவிர, வெறுப்பைக் கொட்டியதில்லை. அதேபோல பத்திரிகையாளர்களையும் விமர்சித்ததுண்டு என்றாலும் அதுவும் நாகரிக எல்லையைத் தாண்டியதில்லை. வரம்பே இல்லாமல் பேசுவதை அவமானமாகவே தலைவர்கள் கருதினார்கள். அப்படியெல்லாம் பேசுவதற்கென்று அரசியல் பேச்சாளர்கள் என்று தனிப் பிரிவே இருந்தது. அப்படிப்பட்ட பேச்சாளர்களுக்கு அரசியலிலும் சரி, பொதுமக்கள் மத்தியிலும் சரி சமூக அந்தஸ்து இருந்தது கிடையாது.

மாற்றுக் கருத்து இருந்தாலும் பாஜக என்பது ஓர் அரசியல் இயக்கம். அதுவும் நாட்டையே ஆள்கிற கட்சி. அதன் பிரதிநிதியாகப் பேசும்போது மக்கள் ரசிக்கும்படி பேச வேண்டுமே தவிர, முகம் சுளிக்கவைக்கும்படி பேசக் கூடாது. எச்.ராஜா போன்றோரெல்லாம் இதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு முக்கியப் பதவிகள் தராமல் பாஜக புறக்கணிக்கிறதே தவிர, அவரைக் கண்டிப்பதில்லை. அதேபோல், பழனிவேல் தியாகராஜனை நல்ல பொருளாதார நிபுணர் என்று சொல்கிறார்கள். அதை நிரூபித்துக்காட்டுவதில்தான் அவரது பெருமை இருக்கிறதே ஒழிய, நான் யார் தெரியுமா என்று பேசுவதெல்லாம் தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொள்கிற பேச்சாகத்தான் இருக்கிறது.

தன்னைப் பற்றிய மோசமான சுவர் விளம்பரத்துக்கு விளக்கு போடச் சொன்னவர் அண்ணா. 'உன் தலையைச் சீவிவிடுவேன்' என்று வடமாநில சாமியார் ஒருவர் மிரட்டியபோது, 'என் தலையை நானே சீவ முடியாது' என்று ஜோக் அடித்தவர் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் மேலாகப் பண்பாளர் என்று பெயரெடுத்தவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன். அவரது மகனான பழனிவேல் தியாகராஜனின் பேச்சு எதுவும் ரசிக்கும்படி இல்லை" என்றார்.

மாறுவார்களா இருவரும்?

சமூக ஊடகங்களின் வளர்ச்சி இல்லாத காலத்தில், எச்.ராஜா காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் (திமுக ஆதரவுடன்) போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு தனது தடாலடிப் பேச்சால் தமிழ்நாடு முழுக்க அறியப்பட்ட பேச்சாளராக அவர் உருவானபோது, அவரால் எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற முடியாமல் போனது. சாரணர் தேர்தலில்கூட மோசமான தோல்வியையே (52 ஓட்டு) அவர் பெற்றார். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள் என்பதே சிவகங்கை மக்களவைத் தொகுதி மக்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், அவரை எதிர்த்து எச்.ராஜா வேட்பாளரானதும் அதற்கு இவரே பரவாயில்லை என்று மக்கள் வாக்களித்தார்கள் என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

அதேபோல, ஓட்டுக்குப் பணம் தராமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில்கூட யாரும் வெற்றிபெற முடியாது என்கிற மோசமான நிலையில் இருக்கும் தமிழ்நாட்டில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி, 2021 தேர்தலிலும் சரி பத்து பைசாகூட கொடுக்காமல் வெற்றிபெற்றவர் பழனிவேல் தியாகராஜன். ஆனால், இப்போது அவரது பேச்சுகளை எல்லாம் பார்த்தால், திமுகவின் எச்.ராஜாவாக அவர் மாறிவிடுவாரோ என்று தோன்றுகிறது. பெரிதும் கிண்டல்செய்யப்பட்ட செல்லூர் ராஜூகூட மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியல் செய்கிறார். மெத்தப்படித்த பழனிவேல் தியாகராஜனுக்கு அது எப்போது கைவரப் போகிறதோ தெரியவில்லை.

இருவரும் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதுதான் தமிழக அரசியலுக்கு நல்லது. இல்லையென்றால் விதண்டாவாதங்களின் களமாகவே அரசியல் ஆகிவிடும்!

Related Stories

No stories found.