‘பொய்க்கு மேல் பொய்யாக சொல்கிறார்’ - பிரதமர் மோடியைக் குற்றம்சாட்டும் கார்கே!

‘பொய்க்கு மேல் பொய்யாக சொல்கிறார்’ - பிரதமர் மோடியைக் குற்றம்சாட்டும் கார்கே!

பிரதமர் மோடி தன்னை ஏழை என்று கூறி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார் என்றும், அவர் பொய்யர்களின் தலைவர் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் நர்மதா மாவட்டத்தில் டெடியாபாடா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, "70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடிஜியும் அமித் ஷாவும் கேட்கிறார்கள். 70 ஆண்டுகளில் நாங்கள் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஜனநாயகம் கிடைத்திருக்காது. அவர்கள் தங்களை எப்போதும் ஏழைகள் என்று கூறிக்கொள்கிறார்கள். நானும் ஏழைதான். நான் மிக ஏழ்மையில் இருந்து வந்தவன். நான் தீண்டத்தகாத சாதியிலிருந்து வந்தவன். குறைந்த பட்சம் மக்கள் உங்கள் டீயையாவது குடிப்பார்கள். மக்கள் என் டீயைக் கூட குடிப்பதில்லை" என்று கூறினார்.

மேலும்,"நான் ஏழை என்று சொல்லி மக்களிடம் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள் மக்கள் இப்போது புத்திசாலிகள், அவர்கள் முட்டாள்கள் இல்லை. ஓரிரு முறை பொய் சொன்னால் மக்கள் கேட்பார்கள். எத்தனை முறைதான் பொய் சொல்வீர்கள். பொய்க்கு மேல் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் பொய்யர்களின் தலைவன். இந்த காங்கிரஸ்காரர்கள் நாட்டைக் கொள்ளையடித்தார்கள் என சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள்தான் ஏழைகளின் நிலத்தை அபகரிக்கிறீர்கள், ஆதிவாசிகளுக்கு நிலம் கொடுக்கவில்லை. இப்போது நிலம், நீர் மற்றும் காடுகளை அழிப்பது யார்? நீங்களும் நீங்கள் யாருடன் நிற்கிறீர்களோ அந்த பணக்காரர்களும்தான் எங்களை கொள்ளையடிக்கிறார்கள்" என்று அவர் பிரதமரை குற்றம் சாட்டினார்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in