நடிகர்கள், தொழிலதிபர்களிடம் பல கோடி சுருட்டல்: எப்படி நடந்தது இரிடியம் மோசடி?

நடிகர்கள், தொழிலதிபர்களிடம் பல கோடி சுருட்டல்: எப்படி நடந்தது இரிடியம் மோசடி?

இரிடியம் மோசடியில் ஈடுபட்டு சமீபத்தில் கைதான ராம்பிரபு ராஜேந்திரனிடம், தானும் 1.88 கோடி ரூபாயை இழந்திருப்பதாக நடிகர் விக்னேஷ் கொடுத்த புகார், "யார் இந்த ராம்பிரபு? எப்படி நடந்தது இந்த மோசடி?" என்று அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

இதுபற்றிய விசாரணையில் இறங்கினோம்.

ராம்பிரபு மீது கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் கேட்டபோது, "நான் விடுமுறையில் இருக்கிறேன் சார். எனக்கு வழக்கு விவரம் அவ்வளவாகத் தெரியாது. இன்னொரு எஸ்.ஐ. எண் தருகிறேன். அவர் ஸ்டேஷனில்தான் இருப்பார். பேசுங்கள்" என்றார்.

அவர் கொடுத்த எண்ணில் எஸ்.ஐ. கொண்டப்பனிடம் பேசியபோது, "இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஐ. 3 மாதத்துக்கு முன்பே(?) இடமாற்றலாகிவிட்டார். இரிடியம் எப்படி இருக்கும்னு தெரியல. நான் பார்த்ததும் இல்லை" என்று நழுவினார்.

விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸிடம் கேட்டபோது, "நானும் விடுமுறையில்தான் இருக்கிறேன். இந்த மோசடி எப்படி நடந்தது என்று போனில் சொன்னாலும் புரியாது. நான் பணிக்கு வந்த பிறகு நேரில் சந்திப்போம்" என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

முஹம்மது தமீம்
முஹம்மது தமீம்

கடைசியில் புகார்தாரரான சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முஹம்மது தமீமிடம் பேசினோம். "ராம்பிரபு ராஜேந்திரன், இரிடியும் விற்றதால் கிடைத்த தனது பணம் 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கியில் இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி விதிப்படி அவ்வளவு தொகையை ஒரே நபரிடம் ஒப்படைக்க முடியாது என்றும், 133 பயனாளிகளுக்குத்தான் பகிர்ந்தளிக்க முடியும் என்பதால், சிலரை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் என் நண்பர் பாலமுருகன் சொன்னார்.

'தவறவிடக்கூடாது - நல்ல வாய்ப்பு' என்று அவர் சொன்னதால், கடந்த 2015-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோயிலில் இருக்கும் ராம்பிரபு ராஜேந்திரனின் பண்ணை வீட்டுக்குச் சென்று நானும், பாலமுருகனும் அவரைச் சந்தித்தோம். அவருக்குப் பாதுகாப்புக்கு சஃபாரி அணிந்த நான்கைந்து பேர் துப்பாக்கியுடன் நின்றார்கள். அவரது வீட்டில் நின்ற காரில்கூட ரிசர்வ் வங்கி என்று எழுதப்பட்டிருந்தது. அவர் பார்க்க கிராமத்து தோற்றத்தில் இருந்தாலும், பேச்சில் பயிற்சி பெற்ற மார்க்கெட்டிங் ஆட்களைப் போல 100 மடங்கு திறமைகொண்டவராக இருந்தார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர், ஒரு எழுத்தாளருக்குரிய நேர்த்தியோடு அவர் சொன்ன கதையை, ஐஏஎஸ் படித்த ஆட்கள்கூட நம்பிவிடுவார்கள்.

எங்கள் சந்திப்பின்போது, தன்னிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருந்ததாகவும், அதை இந்திய அரசின் உதவியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள இரிடியம் கம்பெனிக்கு விற்றதாகவும், அந்தத் தொகை 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டதாகவும் கூறி அதற்கான ரிசர்வ் வங்கிக் கடிதம் ஒன்றையும் காட்டினார். அதைப் பார்த்து நாங்கள் பிரமிப்படைந்தோம்.

இரிடியம் தன்னிடம் இருந்தபோது அதன் கதிர்வீச்சு தன்னை பாதிக்காமல் இருப்பதற்காக அவர் 'என்வோல்டா ரேடியேஷன் புரொடெக் ஷன்' என்ற கருவி வாங்கியதற்கான ரசீது, வங்கிப் பரிவர்த்தனை விவரத்தையும் காட்டினார். 'பணத்தை விரைந்து வெளியே எடுக்க வேண்டும் என்றால், பங்குதாரர்களைச் சேர்க்க வேண்டும் என்பதால்தான் அவசரப்படுகிறேன். எனது அவசரத்தைத் புரிந்துகொண்டு, 1 லட்சம் தந்தால் 1 கோடி தருகிறேன். 10 லட்சம் தந்தால் ஆறே மாதத்தில் 10 கோடி தருகிறேன்' என்றார்.

வெறுனே அவர் மட்டும் இதைச் சொல்லவில்லை. இதுதொடர்பாக விடுதி ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், விஞ்ஞானிகள் எல்லாம் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றை நடத்தினார். அதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்துகொண்டு, இரிடியத்தின் பெருமைகளையும், இந்தியா விரைவில் வல்லரசாக இருப்பது பற்றியும் பேசினார். இதை எல்லாம் நம்பித்தான், நான் 5 லட்ச ரூபாயை ராம்பிரபு ராஜேந்திரனிடம் ரொக்கமாகவும், மீதி 5 லட்சத்தை அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு வழியாகவும் கொடுத்தேன். அவரும் உடனடியாக தனது ஆக்ஸிஸ் வங்கி செக் ஒன்றை எடுத்து, பிளாங்க் செக்காக என்னிடம் கொடுத்தார்.

6 மாதங்கள் வரையில் நானும் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். 6 மாதம் கழித்து அவரைத் தொடர்பு கொண்டபோது, 'அடுத்த மாதம் வந்துவிடும்' என்றார். அடுத்த முறை கேட்டபோதும், 'அடுத்த மாதம் வந்துவிடும்' என்றார். பிறகு, ‘கரோனா காரணமாக கொஞ்சம் லேட்டாகிவிட்டது. சீக்கிரமே கண்டெய்னர் வந்துவிடும்’ என்றார். இப்படியே 3 வருடம் ஆகிவிட்டது. பொறுமையிழந்து அவரை நேரில் பார்ப்பதற்காக கிருஷ்ணன்கோயிலுக்கே போனோம். அவர் அங்கில்லை. அவரைத் தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. கிருஷ்ணன்கோயில் போலீஸில் புகார் செய்தால், அவர்கள் புகாரையே வாங்கவில்லை. அவரது சொந்த ஊர் சுந்தரபாண்டியம் வத்திராயிருப்பு காவல்நிலைய எல்லைக்குள் வருவதால் அங்கே போய் புகார் செய்தோம். அப்போதுதான் தெரிந்தது, எங்களைப் போல பல நூறுபேரை அவர் ஏமாற்றியிருக்கிறார் என்று.

இதன் பிறகு விருதுநகர் எஸ்பியிடம் புகார் கொடுக்கச் சென்றேன். ராம்பிரபு ராஜேந்திரன் என்னைத் தொடர்புகொண்டு, 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பணம்வந்துவிடும்' என்றார். பிறகு, மறுபடியும் காலம் தாழ்த்தினார். அழுத்திக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். அதனால்தான் எஸ்.பியிடம் புகார் கொடுத்தேன். கொஞ்சம் தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அவரை போலீஸார் கைது செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது" என்றார் தமீம்.

அந்தக் கார்...
அந்தக் கார்...
மோசடி மன்னன் ராம்பிரபு
மோசடி மன்னன் ராம்பிரபு

கைது அல்ல... போலீஸ் பாதுகாப்பு

ராம்பிரபு ராஜேந்திரன் கைதான தகவலை பத்திரிகைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரிடம் பணம்கொடுத்து ஏமாந்த பலர், கிருஷ்ணன் கோவிலில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு நேரிலும், போனிலும் விசாரித்தபோது, "பத்திரிகை செய்தி எல்லாம் பொய். அவர் மத்திய அரசு பாதுகாப்பில், தனி பங்களாவில் இருக்கிறார். இந்தியா வல்லரசாக உதவும் மிகமுக்கியமான மனிதர் என்பதால், அவரை காவல்துறை பாதுகாக்கிறது. அதைத் தப்பாகப் புரிந்துகொண்டு கைது என்று செய்தி போடுகிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


இதற்கிடையே, ராம்பிரபு ராஜேந்திரனுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, முஹம்மது தமீம் சார்பில் மதுரை வழக்கறிஞர் திருமுருகன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, "பழங்கால கோயில் கலசத்தில் இருந்த இரிடியம் தனக்கு கிடைத்திருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடி என்றும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகச் சொல்லியிருக்கிறார் ராம்பிரபு ராஜேந்திரன். ரிசர்வ் வங்கி அனுமதியுடன் விற்றோம் என்று அதற்கும் சில போலியான ஆவணங்களைக் காட்டியிருக்கிறார். அந்தப் பணம் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டதாகச் சொன்ன அவர், சிலரிடம் அது 3 லட்சம் கோடி என்று சொல்லியிருக்கிறார். எனது கிளைன்ட் முஹம்மது தமீமிடம் 10 ஆயிரம் கோடி என்று என்று சொல்லியிருக்கிறார். ‘எனக்குக் கிடைக்கும் லாபத்துடன் ஒப்பிட்டால் உங்களுக்குத் தரப்போகிற 10 கோடி பெரிய தொகை இல்லை’ என்று ரொம்பச் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.

சென்னைக்கு வந்தால் லீலா பேலஸ் போன்ற நட்சத்திர ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார். குறைந்த பட்சம் ரிசர்வ் வங்கியைத் தொடர்பு கொண்டு கிராஸ் செக் செய்திருந்தாலே அவர் சொல்வது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்திருக்க முடியும்தான். ஆனால், பேச்சாலேயே மயக்கியிருக்கிறார். அப்படியெல்லாம் யாருமே சிந்திக்கவே இல்லை என்பதுதான் பிரச்சினை.

போலி ஆவணங்களில் ஒன்று
போலி ஆவணங்களில் ஒன்று

இரிடியம் சம்பந்தமாக விஞ்ஞானிகள் பேசிய ஆடியோ, வீடியோ கேசட்கள் நிறைய வைத்திருக்கிறான். அதை எல்லாம் போட்டுக்காட்டித்தான் எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான். இரிடியத்தை எப்படி செயற்கைக்கோளில் பயன்படுத்துவார்கள். அதன் மூலம் இந்தியா எப்படி வளர்ச்சியடையப் போகிறது என்றெல்லாம் பலர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்துதான் பணம் வாங்கியதாக முஹம்மது தமீம் சொன்னார்.

நாங்கள் ஜாமீன் மனுவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தபோது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வெறும் 56 லட்சம் மோசடி என்றார்கள். இப்போது 2.87 கோடி ரூபாய் மோசடி என்று அவர்களே சொல்கிறார்கள். இந்தப் புகார் வந்தபோது, விருதுநகர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்பி-யான குற்றாலீஸ்வரன் தலைமையில் தனிக்குழு அமைத்து இந்த மோசடி பற்றி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர், 'தவறு நடந்தது உண்மைதான், இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' என்று ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி நாங்கள் கோர்ட்டில் முறையிட்டபோது, அரசு தரப்புக்கு அந்த விவரமே தெரியவில்லை. போலீஸார் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் மனுத்தாக்கல் செய்தபோதே, நடிகர் விக்னேஷ் உள்ளிட்டவர்கள் ஏமாந்தது குறித்தும் கோர்ட்டில் சொன்னோம். அதையும் அரசுத் தரப்பு ஏற்கவில்லை. நேற்று அவரே பகிரங்கமாக புகார் கொடுத்திருக்கிறார். ஜாமீன் மனு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்று நம்புகிறோம்" என்றார்.


ராம்பிரபு ராஜேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். சதுரங்க வேட்டை நாயகன் போல, இரிடியம் தவிர இவர் வேறு சில மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in