ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணை தலைவரானது எப்படி?- ஓபிஎஸ்-க்கு `செக்’ வைக்கும் ஈபிஎஸ்

ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணை தலைவரானது எப்படி?- ஓபிஎஸ்-க்கு `செக்’ வைக்கும் ஈபிஎஸ்

மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முக்கிய அதிகாரமையமாக இருக்கின்றனர். இவர்களை மீறி கட்சியில் யாரும் வளர முடியாது. செல்லூர் கே.ராஜூ மாநகர மாவட்டச் செயலாளராக 21 ஆண்டுகள் இருக்கிறார்.

ராஜன் செல்லப்பா புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும், ஆர்.பி.உதயகுமார் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். மூவருக்கும் இடையே கோஷ்டிபூசல் இருந்தாலும் ஆரம்பம் முதல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி அணியிலே இருக்கிறார்கள். மூவரும் ஒரே அணியாக கே.பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கட்சியில் குரல் கொடுத்தார்கள். அதற்கு பரிசாகதான் தற்போது கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு அமைப்பு செயலாளர் பதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தை சேந்தவர் என்பதோடு முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவரது பதவியை மற்றவர்களுக்கு வழங்கினால் கட்சிக்குள் சிக்கல் ஏற்படும். அதனால், அவரது சமூகத்தை சேர்ந்த தென் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கே ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘செக்’ வைக்கும் வகையிலே ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டிருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராக தன்னைக்காட்டி கொண்ட ஆர்.பி.உதயகுமார், அவர் சிறைக்கு சென்றதும் கே.பழனிசாமி அணிக்கு தாவினார். அவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தென் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக கே.பழனிசாமிக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல் அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கே.பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்தார். அதனால், கட்சியில் ஆர்.பி.உதயகுமாருக்கு கே.பழனிசாமி முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதேநேரத்தில் பன்னீர்செல்வம், தென் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் கூட பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலர் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றதால் வட மாவட்டங்களை போல் தென் மாவட்டங்களிலும் கே.பழனிசாமிக்கு ஆதரவு பெருகியது. அதற்கு ஆர்.பி.உதயகுமாரும் ஒரு காரணமாக இருந்தார். அதனாலே, ஆர்.பி.உதயகுமாருக்கு தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கியிருக்கிறார். கட்சியில் ராஜன் செல்லப்பா, செல்லூர் கே.ராஜூவை விட ஜூனியர். அதனால், அவர்களுக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கி சரிகட்டிவிட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு கட்சியில் தனக்கு அடுத்த இடத்தை கொடுத்துள்ளார்" என்றனர்.

ஒரே நபர்களிடம் குவியும் அதிகாரம்

செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருக்கும் நிலையில் தற்போது மாநில அமைப்பு செயலாளராக்கப்பட்டுள்ளனர். அதுபோல், ஏற்கெனவே மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். தற்போது கூடுதலாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது மாவட்டச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவார்கள். புதியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அப்பதவிகள் வழங்கப்படும்.

அதனால், யார் கட்சியில் இருந்து விலகி சென்றாலும் புதியவர்கள் முக்கியத்துவம் பெற்று மாவட்டங்களில் கட்சியை வழிநடத்துவார்கள். அதனாலே, திமுகவைவிட அதிமுகவில் இளைஞர்கள் அதிகம் சேர்ந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் கட்சியில் முக்கியப்பதவிகளுக்கு வரவும் செய்தார்கள். ஆனால், தற்போது திமுகவை போல் தற்போது அதிமுகவிலும் ஒரே நபர்களுக்கு பதவிகள் வாரி வழங்கப்படுவதால் மற்றவர்கள் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில பொறுப்புகளுக்கு வர முடியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in