காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது எப்படி?- ஏ.கே.ஆண்டனி போட்ட பிளான் இதுதான்

உமா தாமஸ்
உமா தாமஸ்

தேசம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடவைச் சந்தித்துவரும் நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி, கேரளத்தில் திருகாக்கரைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. அதன் சுவாரஸ்யப் பின்னணி இப்போது வெளிவந்துள்ளது.

கேரள மாநிலத்தின் திருகாக்கரை தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான பி.டி.தாமஸ் (70) அண்மையில் காலமானார். இதையடுத்து திருக்காக்கரை தொகுதிக்கு இடைத்தேர்தல் மே 31-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி வென்றது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் உமா தாமஸ் 72,770 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் 47,754 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ், 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

காங்கிரஸின் பலம்!

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததே வேட்பாளர் தேர்வுதான். வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சீட்கேட்டு பல கோஷ்டிகளில் இருந்தும் முட்டிமோதுவார்கள். ஆனால் அண்மையில் தேசிய அரசியலுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, மாநில அரசியலுக்குத் திரும்பியிருக்கும், ‘ஏ.கே.ஆண்டனி’ கோஷ்டிகளைக் களைந்து இந்த இடைத்தேர்தல் வெற்றியை தலைமைக்கு பரிசாகக் கொடுக்கவேண்டும் என சூளுரைத்தார். அதேபோல் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா, மாநிலத் தலைவர் கே.சுதாகரன், எதிர்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் என பல கோஷ்டிகளையும் கடந்து, ஏக மனதாக மறைந்த எம்.எல்.ஏ தாமஸின் மனைவி உமா தாமஸை வேட்பாளர் ஆக்கியது ஏ.கே.ஆண்டனியின் அரசியல் நகர்வுதான்! தொகுதி மக்கள் மத்தியில் தாமஸ் மறைவால் எழுந்த அனுதாப அலை அவர் மனைவியை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடவைத்தது.

தாமஸ் கல்லூரிக் காலத்தில் உமாவை காதலித்து மணந்தவர். உமா, இந்து மதத்தையும், தாமஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம் அந்தவகையில் மதம் கடந்து இந்து, கிறிஸ்தவர் வாக்குகளை வசீகரித்ததால் பாஜகவின் இந்துத்துவ அரசியலை வீழ்த்தியதோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் சிறுபான்மையினரை முன்னிறுத்திய பிரச்சாரத்தையும் வீழ்த்தியது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரள இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடையும் என்பதை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே கணித்திருந்தது ஆளும் மார்க்சிஸ்ட். ஆனால் கேரள அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தொடர்ச்சியாக ஆட்சியைக் கொடுத்த மக்கள், இடைத்தேர்தலில் நல்லவாக்கினைக் கொடுப்பார்கள். குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வெல்லும் எனக் கணித்தது மார்க்சிஸ்ட். ஆனால் இவ்வளவுப் பெரிய வாக்கு வித்தியாசம் வரும் என எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் திருக்காக்கரைத் தொகுதியில் சி.பி.எமிற்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது ஏன் என தேர்தல் பிரச்சாரக் கமிட்டி அறிக்கை தரவும் கோரியிருக்கிறார் பினராயி விஜயன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in