இந்துமத இறை நம்பிக்கை இல்லாதவர்களை எப்படி தேர் வடம் பிடிக்க அனுமதிக்க முடியும்?

திமுக அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக
தேர்வடம் பிடித்து இழுக்கும் மனோ தங்கராஜ்...
தேர்வடம் பிடித்து இழுக்கும் மனோ தங்கராஜ்...

குமரி மாவட்டம், வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்துக்கு வடம் பிடிக்க வந்த அமைச்சர் மனோதங்கராஜுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையானது. அதிலும் மத ரீதியான காரணத்தை முன்வைத்து பாஜக செய்த போராட்டம், திமுகவினரையும் உஷ்ணப்படுத்தியுள்ளது.

தேரோட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடிக்கக் கூடாது என போராட்டத்தை முன்னெடுத்ததில் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி முதன்மையானவர். அவரிடம் காமதேனு மின்னிதழுக்காக சில கேள்விகளை முன்வைத்தோம்.

அனைவருக்கும் பொதுவான அமைச்சர் ஒருவரை கோயில் தேரை வடம்பிடித்து இழுக்கக்கூடாது என்று சொல்வது சரியா?

இந்துக்கள் அனைவருக்கும் தேரை வடம் பிடித்து இழுக்க உரிமையுண்டு. அதன்படி எந்தக் கட்சியில் இருக்கும் இந்துக்களும் தேரை வடம் பிடித்து இழுக்கலாம். தூத்துக்குடியில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்து வடம்பிடித்து இழுத்தார். உண்மையில் அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்! ஆனால், இந்து மதத்தை நம்பாதவர்களும், இந்து ஆலயங்களுக்குச் செல்லாதவர்களும் வடம் பிடிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்தவகையில் தான் எதிர்த்தோம். எங்களின் உணர்வில் நின்று இதை புரிந்துகொள்ளுங்கள்.

அமைச்சர் மனோதங்கராஜுக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை என எதைவைத்து கூறுகிறீர்கள்?

இந்து ஆலயங்களின் பிரசாதங்களை நெற்றியில் போட்டுக் கொள்ளாதவர்கள் திருக்கோயில் நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குவதையும், வடம்பிடிப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவரும் அப்படிப் பிரசாதங்களை இட்டுக்கொள்ளாதவர்தான்!

’வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதானே நம் பண்பாடு?

அது இந்துக்களுக்கு மட்டும் தானே சொல்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை இந்துக்களின் வழிபாட்டையும், கலாச்சாரத்தையும் நம்பக்கூடியவர்கள்தான் தேர் வடம்பிடிக்க வேண்டும். திமுகவே தங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாகச் சொல்கிறது. இந்து கோயில்களில் நடக்கும் விழாக்களுக்கு திமுக அமைச்சர்கள் தலைமை தாங்குவதையும்கூட வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மாற்று மதத்தைச் சேர்ந்த, இந்துமத இறை நம்பிக்கை இல்லாதவர்களை எப்படி வடம்பிடிக்க அனுமதிக்க முடியும்?

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

காலுக்குச் செருப்பு அணியாதவர், திருமணமே செய்து கொள்ளாதவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர், எளிமையானவர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்ட எம்.ஆர்.காந்தியின் இந்த அரசியல் முன்னெடுப்பு நடுநிலையாளர்களையே முகம்சுளிக்க வைத்திருக்கிறது. திமுகவினரையோ கொதிநிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் மனோதங்கராஜிடமும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

குமரியில் பாஜகவின் இந்துத்துவா அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாஜக இந்து அரசியலை முன்னெடுப்பதாகவே அனைவரும் புரிந்து கொள்கிறீர்கள். அது முற்றிலும் தவறானது. இது இந்து அரசியல் அல்ல. மத அரசியல். மக்களிடம் கொண்டு செல்வதற்கான நல்ல சமூக மாற்றத்திற்கான திட்டங்கள் எதுவும் பாஜகவிடம் இல்லை. அனைத்து சமூக மக்களுக்கும் பயன்படுகிற எந்த நல்ல திட்டத்தையும் மத்திய பாஜக அரசும் செயல்படுத்தவில்லை. மக்களை உணர்வு ரீதியாகத் தக்கவைக்க, பாஜக எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் மதம். அதை பிடித்துக்கொண்டு எம்.ஆர்.காந்தியும் ஆடுகிறார். ஒரு எம்எல்ஏ-வாக இருந்தும் அவருக்கு மரபு தெரியவில்லை. அனைவரும் சமம் என்ற உணர்வே இல்லாதவராகவும், வரலாறு தெரியாதவராகவும் இருக்கிறார்.

மனோதங்கராஜ்
மனோதங்கராஜ்

தேரோட்டத்தில் உங்களைக் குறிவைத்து பாஜக போராடியதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

குமரியில் அனைவருக்குமான வளர்ச்சி என்னும் கோஷத்தை முன்வைத்து செயல்பட்டு வருகிறேன். இதில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. சாதி கிடையாது. அதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘தீர்வு தளம்’ என்னும் பெயரில் குமரி மாவட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறேன். இதையெல்லாம் பார்த்ததும் பாஜகவினருக்கு வயிற்றெரிச்சல் வருகிறது.

இந்து இறை நம்பிக்கை இல்லாதவர் என உங்களை நோக்கி பாஜக குற்றஞ்சாட்டுகிறதே?

திமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்களின் புனரமைப்பிற்கு சுமார் 50 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. இது சட்டசபையிலேயே அறிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டாகி விட்டதாக நினைத்த பூனையைப் போல பாஜகவினர் இருந்தார்கள். அதுமட்டுமின்றி, எங்களைப் பொறுத்தவரை எந்த வழிபாட்டுத் தலத்திற்குச் சென்றாலும், அங்கிருக்கும் ஆச்சாரங்களை மதித்து பின்பற்றுவதுதான் எங்கள் வழக்கம். யாருடைய ஆன்மிக உணர்வுகளையும் கடுகளவும் பிசகும் நோக்கம் எப்போதுமே எங்களுக்குக் கிடையாது.

என் தொகுதிக்குள் வரும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்தக் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்காக கோயில் புனரமைப்புப் பணிகள் நடக்கிறது. அதில்கூட உள்ளூர்மக்கள், பக்தர்களைத் திரட்டி தேவபிரசன்னம் பார்த்து பழமை மாறாமல் கோயில் புனரமைப்புப் பணிகள் நடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பாஜகவுக்கு ஆன்மிகம் வரவில்லை; ஆத்திரம் வருகிறது.

குமரி மாவட்ட மக்கள் இதையெல்லாம் புரிந்திருக்கிறார்களா? மதம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா?

பாஜகவின் சதிவலையை அவர்கள் தெளிவாகவே புரிந்திருக்கிறார்கள். ஒருநாளும் பாஜகவின் அரசியலுக்கு குமரி மாவட்ட மக்கள் பலிகடா ஆகமாட்டார்கள். அமைச்சர் துணிச்சலானவர் என்றே சொல்கிறார்கள். எங்கள் கட்சி வட்டத்தையும் தாண்டி, நாம் தமிழர் கட்சியின் வாட்ஸ் அப் குழுக்களில்கூட அப்படியான பதிவு செல்வதாகக் காட்டினார்கள். அனைத்து சமூக மக்களுக்கான திட்டங்களைத் தருபவர் முதல்வர் ஸ்டாலின். கடந்த ஓராண்டில் செய்த சாதனைகளுக்குப் பதிலாகச் சொல்லவும் பேசவும் பாஜகவுக்கு அரசியல் களமே இல்லை. அதனாலேயே இப்போது, வேளிமலை தேரோட்டத்தை கையில் எடுத்து அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

நான் பாஜகவினரை சட்டை செய்யவில்லை. குமரி மாவட்ட மக்கள் என் பின்னால் நிற்கிறார்கள். திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகத்தை வெகுவிமர்சையாக நடத்தும் பணிகளில் முனைப்புக் காட்டிவருகிறேன்.

அமைச்சர் மனோதங்கராஜ் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்த விவகாரத்தை பாஜகவினர் வம்படியாய் பிடித்து அரசியலாக்கிக் கொண்டிருக்க, இந்து கோயில்களுக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி தொடங்கி, ஆலயங்களில் செய்த புனரமைப்புப் பணிகள் வரை பட்டியலிட்டு திமுகவினர் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருக் கிறார்கள். இந்துக்களின் வாக்குகளை பெரிதும் நம்பும் பாஜக இதைப் பார்த்து இன்னும் உஷ்ணத்தில் தகிக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in