காங்கிரஸ் கரை சேர என்ன வழி?

பிரியங்கா - ராகுல் - சோனியா
பிரியங்கா - ராகுல் - சோனியா -

காங்கிரஸ் கட்சியின் ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி அக்கட்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. வெற்றி என்பதே காங்கிரஸ் கட்சிக்கு குறிஞ்சிப் பூ போல ஆகிவிட்ட நிலையில், சோனியா - ராகுல் - பிரியங்காவின் இருப்பும் ஆட்டம் காண தொடங்கியிருக்கின்றன. போதாக்குறைக்கு, ஜி-23 என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களின் குழு, கட்சியை இன்னும் பலவீனப்படுத்தும் முயற்சியில் குதித்திருக்கிறது. நாலாபுறமும் காங்கிரஸ் கட்சியை பிரச்சினைகளும் சர்ச்சைகளும் சுழற்றியடிக்க, அதிலிருந்து மீண்டு வர காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும்?

மிரட்டும் மோடி தலைமை

ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கில் வெற்றி பெற்ற பிறகு ஆசுவாசப்படுத்திக் கொள்வதைக்கூட சிந்திக்காமல் பாஜகவினர் குஜராத்துக்குக் கிளம்பிவிட்டனர். டிசம்பரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரதமர் மோடி இப்போதே ஆயத்தமாகி விட்டார்.

பாஜகவின் தேர்தல் அணுகுமுறை என்பது 24 x 27 x 365. சதாகாலமும் தேர்தல் சிந்தனை. மாநிலத்துக்கு ஒரு அஜெண்டா, வெற்றிக்காக எல்லையில்லா வியூகங்கள் எனத் தேர்தல் பற்றிய சிந்தனை பிரதமர் மோடி தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை உண்டு. மாநிலத்தில் பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, பிரதமர் மோடிக்காக மக்கள் வாக்களிக்கிறார்கள். இந்திரா காந்திக்குப் பிறகு ஒரு கவர்ச்சிகரமான தலைவரைப் போல உருவெடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட மோடியையும், பாஜகவையும் வீழ்த்த எத்தனிக்கும் காங்கிரஸ் கட்சி, அதற்கு நேர்மாறாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

பாஜகவையும், மோடியையும் வீழ்த்தும் அளவுக்கு இன்று காங்கிரஸ் கட்சியிடம் வாக்கு வங்கி இல்லை என்ற எண்ணம் பொதுவாகவே உள்ளது. உண்மையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கரையவில்லை. அது மடைமாறிக் கிடக்கிறது. 1996-ல் மக்களவையில் நரசிம்மராவ் தலைமையில் 146 எம்பி-க்களை வைத்திருந்த கட்சிதான் காங்கிரஸ். தென் இந்தியாவில் அறிமுகமே இல்லாத சீதாராம் கேசரி தலைமையில் 1998-ல் 141 தொகுதிகளில் வென்ற கட்சி. ஆனால், இன்று நேருவின் வாரிசுகள், காந்தி குடும்பம் என்ற பழம் பெருமைகளைப் பெற்றவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தும், காங்கிரஸ் கட்சியால் 60 தொகுதிகளில்கூட மக்களவையில் வெல்ல முடியவில்லை. 2014-ல் 44 தொகுதிகள், 2019-ல் 52 என்ற அளவோடு காங்கிரஸ் சுருங்கிக் கிடக்கிறது. போதாக்குறைக்கு, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வரிசையாக பலத்த அடி வாங்கி வருகிறது. காங்கிரஸில் என்ன சிக்கல்கள் உள்ளன?

டெல்லிக்கே மதிப்பு

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மாநில தலைமைக்கென எந்த அதிகாரமும் கிடையாது. டெல்லியில் இருந்து ரிங் மாஸ்டர்களைப் போலத்தான் மாநில தலைமையை இயக்குவார்கள். மாநில தலைமையின் கோரிக்கைகளை ஏற்க மாட்டார்கள். உதாரணமாக, 1996 தமிழக தேர்தலைச் சொல்லலாம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் ஒரே குரலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்த வேளையில், காங்கிரஸ் டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணியை அறிவித்தது. விளைவு, தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது. இதே போலத்தான் மாநில முதல்வர்களை பந்தாடுவதும். உதாரணம், இப்போது பஞ்சாப்பையே சொல்லலாம். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு உட்கட்சி பூசல் ஏற்பட்டு ஒரு முதல்வரை மாற்றும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது. ஒரு வலிமையான மாநிலத் தலைமை என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையே கிடையாது. எல்லாமே டெல்லிதான்.

வேடிக்கை பார்க்கும் தலைமை

தொண்ணூறுகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சியால் வெல்ல முடிந்தது. அதற்கு அன்று ஒன்றுபட்ட ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் போன்ற சில மாநிலங்கள் உதவின. ஆனால், மகாராஷ்டிராவில் சரத்பவாரால் காங்கிரஸ் வாக்கு வங்கி இரண்டாகப் பிரிந்தது. ஆந்திராவில் காங்கிரஸ் வாக்குகளை அப்படியே தன் கட்சி வாக்குகளாக ஜெகன்மோகன் ரெட்டி மாற்றிக் கொண்டார். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கட்சி தொடங்கிய மம்தா பானர்ஜியின் வளர்ச்சி, காங்கிரசைக் காணாமல் போகச் செய்துவிட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பஞ்சாப்பில் அம்ரீந்தர் சிங், சட்டீஸ்கரில் அஜித் யோகி, தமிழகத்தில் ஜி.கே.வாசன் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு வெளியேறியது 1998-க்கு பிறகான காலத்தில்தான். இந்த 20 ஆண்டு காலத்தில் கட்சியிலிருந்து விலகி சென்றவர்களையோ, தனி கட்சி நடத்தி வருபவர்களையோ அணுகி, மீண்டும் தாய்க் கட்சியோடு இணைக்க காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதுண்டா? இந்தத் தலைவர்களுக்கு இன்று கிடைக்கும் வாக்குகள் எல்லாம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளாக இருந்தவைதான். இவர்களை ஒருங்கிணைக்காமல் மீண்டும் காங்கிரஸ் கட்சியால் எப்படி பழைய நிலைக்குத் திரும்ப முடியும்?

பதவி வெறி

காங்கிரஸ் கட்சியில் உள்ள இன்னொரு சிக்கல், கோஷ்டிப் பூசலும் பதவி வெறியும். உதாரணத்துக்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் 2018-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் பதவி கமல்நாத்துக்கு வழங்கப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கமல்நாத் மத்திய அமைச்சர். மத்தியில் ஆட்சியை இழந்ததும், மாநில அரசியலுக்கு வந்து முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் தலைமையும் உடந்தை. அதன் விளைவு, ஜோதிராதித்யா சிந்தியாவை இழுத்து ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. புதுச்சேரியில் நமச்சிவாயத்தை ஓரங்கட்டிவிட்டு நாராயணசாமி முதல்வரானார். இன்று கதை என்னவானது? ராஜஸ்தானில் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்த அசோக் கெலாட்டைத்தான் காங்கிரஸ் தலைமை முதல்வராக்குகிறது. அங்கும் கோஷ்டிப்பூசலால் சச்சின் பைலட், காங்கிரஸ் கழுத்தில் கத்தியை வைக்க காலம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மாநிலங்களில் புதிய வலுவான இளம் தலைமையை உருவாக்கவோ, சீனியர் தலைவர்களை டெல்லி அரசியலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியைப் பின்பற்றவோ டெல்லி காங்கிரஸ் தலைமை தயாராகவே இல்லை. இனியாவது மாநிலங்களில் புதிய வலுவான தலைவர்களை உருவாக்கவும் சீனியர் தலைவர்களின் அனுபவத்தையும், பிரபலத்தையும் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள முன்வராவிட்டால், காங்கிரஸ் கட்சி கட்டெறும்பு ஆவதைத் தடுக்க முடியாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in