
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பல சர்ச்சைகளுக்கும் தூபம் போட்டுள்ளது. உம்மன் சாண்டி அண்மைக்காலமாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் அதிகம் தலைக்காட்டுவதில்லை. பேசும் திறனையும் 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருக்கும் உம்மன் சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், உம்மன் சாண்டியின் சகோதரரான அலெக்ஸ் வி.சாண்டி தனது அண்ணனுக்கு அவரது மகளைத் தவிர, மனைவி, மகன் என யாரும் உரிய சிகிச்சை அளிக்க அக்கறை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். உம்மன் சாண்டியின் மகன் இதை மறுத்ததுடன் தந்தையிடன் சேர்ந்து இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அத்துடன் அடுத்த சில மணி நேரத்தில் சாண்டியை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்படியும் சாந்தம்கொள்ளாத தம்பி அலெக்ஸ் சாண்டி, “அண்ணனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமல் வீட்டில் வைத்து பிரேயர் செய்து குணப்படுத்திவிடலாம் என முயற்சித்தார்கள்” என சர்ச்சையை பற்ற வைத்துள்ளார். இந்த சமாச்சாரங்களை எல்லாம் உற்றுநோக்கியபடி இருக்கிறது கேரள பாஜக முகாம்.