துரைமுருகனுக்கே அல்வா கொடுத்த அதிகாரிகள்!

துரைமுருகன்
துரைமுருகன்
Updated on
1 min read

நீர்வளத்துறையில் 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்று இவர்களை நிரந்தரம் செய்ய அண்மையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. தற்சமயம் இத்துறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்களாம். இதில் சுமார் 1,400 பேர் மட்டுமே 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களாம். இந்த நிலையில், ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நிரந்தரம் குறித்த பட்டியலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேட்டு வாங்கினாராம்.

அதன்படி பட்டியலை எடுத்து அமைச்சரிடம் நீட்டிய அதிகாரிகள், சீனியர்களை விட்டுவிட்டு தங்களுக்கு வேண்டப்பட்ட ஜூனியர் மோஸ்ட் பணியாளர்களை அந்தப் பட்டியிலில் நைசாக சேர்த்துவிட்டார்களாம். இந்த விவரம் தெரிந்து பதறிய சீனியர் பணியாளர்கள், விஷயத்தை அமைச்சரின் கவனத்துக்குக் கவலையோடு கொண்டு சென்றிருக்கிறார்கள். இதைக் கேட்டு ஆவேசமான அமைச்சர், “அரசுக்கு அவப் பெயர் உண்டாக்கப் பக்குறீங்களா? ஒழுங்கா மரியாதையா தகுதியானவர்களை லிஸ்ட்டில் சேர்த்து புதுப் பட்டியல் எடுத்துட்டு வாங்க” என்று பட்டியலைத் திருப்பி அனுப்பினாராம்.

அப்படியும் அசராத சில அதிகாரிகள், வரிசை எண்ணை மட்டும் அங்கே இங்கே என மாற்றிப் போட்டு, இதுதான் புதிய பட்டியல் என அமைச்சரிடம் நீட்டி இருக்கிறார்கள். இதற்கு மேலேயுமா தப்புச் செய்யப்போகிறார்கள் என்று நம்பிய அமைச்சரும் அந்த பட்டியலை ஓகே செய்துவிட்டாராம். இப்போது இந்த விஷயத்தையும் அமைச்சரிடம் சொல்லிப் புலம்பப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம் சிலர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in