
அக்டோபர் 11-ம் தேதி விசிக நடத்தும் சமூக நல்லிணக்கப் மனித சங்கிலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளது வட மாவட்டங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு கட்சிகளுமே திமுக கூட்டணியில் இருந்தாலும் தாங்கள் வலுவாக உள்ள வட மாவட்டங்களில் இருவரும் எதிரும் புதிருமான நிலைப்பாட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம் விசிகவுக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் இருக்கிறது. ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்தால்தான் இரு கட்சிகளுமே அங்கு அரசியல் செய்ய முடியும் என்பதே அங்கு எதார்த்தம். அதனால்தான் தேர்தல் நேரத்தில்கூட பட்டும் படாமலேயே இரு கட்சியினரும் செயல்பட்டார்கள்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் ஒருங்கிணைக்கும் மத நல்லிணக்க மனித சங்கிலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் கலந்துகொள்ளும் என்று அறிவித்து, எதிரான தனது அணுகுமுறையை வேல்முருகன் இணக்கமாக மாற்றியிருப்பது விசிக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.