
குமரி மாவட்டம், முட்டத்தில் நடந்த மீனவர் தினவிழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நேற்று மாலை வந்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் பயணத்தில் சுவாமிதோப்பில் இருக்கும் அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கும் விசிட் அடித்து வணங்கிச் சென்றார் உதயநிதி. ஆனால் அதுவே இப்போது சர்ச்சையாகி உள்ளது.
சுவாமிதோப்பு தலைமைபதிக்குள் கொடிமரம் தாண்டிச் சென்றால் சட்டையில்லாமல், தலையில் தலைப்பாகை கட்டிச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் உதயநிதி ஸ்டாலின், தலைக்கு மேல் தலைப்பாகை கட்டாமல் ஆலயத்தின் பள்ளியறை வரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. “மாற்று மதத்தைச் சேர்ந்தவரான அமைச்சர் மனோ தங்கராஜே தலையில் தலைப்பாகை கட்டிச் செல்லும்போது, உதயநிதி ஏன் கட்டவில்லை?” என கொந்தளிக்கின்றனர் அய்யாவழி பக்தர்கள்.
இதனையடுத்து, அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகியும், பாலபிரஜாபதி அடிகளாரின் தம்பியும் திமுககாரருமான பால ஜனாதிபதி, 'அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன். சட்டையில்லாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் ஏற்றுக்கொண்டேன். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக்கொண்டேன். நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்ற வகையில் நடந்துவிட்டது. அய்யா வழியினரைப் பொறுத்துக்கொள்ளும்படி கேட்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
எனினும், 'உதயநிதி ஸ்டாலினிடம் தலையில் தலைப்பாகை கட்டிவிட்டு வாருங்கள். யாரும், யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதைக் காட்ட அய்யா வைகுண்டர் உருவாக்கிய சிந்தாந்தம் அது என்று சொல்லும் அளவுக்குக்கூடவா ஜனநாயகம் இல்லை?' என சமூகவலைதளங்களில் அய்யா வழி பக்தர்களே இதை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.