ஹெலன் டேவிட்சன் நியமனம்; மகளிரணியும் கனிமொழியின் கட்டுப்பாட்டில்?

வலது ஓரத்தில் ஹெலன் டேவிட்சன்
வலது ஓரத்தில் ஹெலன் டேவிட்சன்

சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவுக்கு குட்பை சொன்னபோதே அவர் வகித்துவந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்பி-யான ஹெலன் டேவிட்சனின் பெயரும் பலமாக அடிபட்டது. ஆனால், கனிமொழி அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் தற்போது, கனிமொழி வகித்து வந்த மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு ஹெலனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. தீவிர கனிமொழி ஆதரவாளரான ஹெலன், அவரது நிழலிலேயே அரசியல் செய்பவர். கனிமொழி சிறையில் இருந்த சமயத்தில் ராஜாத்தி அம்மாளுக்கு பக்க துணையாக இருந்து பார்த்துக் கொண்டவர். அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலில் கட்சிப் பொறுப்புக்கு ஹெலனின் கணவர் டேவிட்சன் விண்ணப்பித்தார். ஆனால், அது அவருக்குக் கைகூடவில்லை. இதற்காக வருத்தப்படாமல் தொடர்ந்து பயணித்த ஹெலனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவைத்திருக்கிறார் கனிமொழி. இதன் மூலம் மகளிரணி பொறுப்பையும் கனிமொழி தனது கட்டுப்பாட்டிலேயே தக்கவைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஹெலன் டேவிட்சன்
ஹெலன் டேவிட்சன்

ஹெலன் டேவிட்சன் ஆர்.சி கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். திமுக மூத்த முன்னோடியான சற்குண பாண்டியனின் மறைவுக்குப் பிறகு நாடார் சமூகத்துப் பெண்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என நாடார் சங்கங்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஹெலனுக்கு முக்கிய பொறுப்பைக் கொடுத்து நாடார் மக்களின் வாட்டத்தைப் போக்கி இருக்கிறது திமுக தலைமை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in