நீயா நானா போட்டியில் தானா வந்த ராஜா!

நீயா நானா போட்டியில் தானா வந்த ராஜா!

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு, மாவட்டப் பொறுப்பாளராக இருந்த செல்லத்துரையும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அண்ணாச்சி ஆசியுடன் தனுஷ்குமார் எம்பியும் முட்டிமோதினர். இதற்காக செல்லத்துரை விசுவாசிகள் நீதிமன்றம் வரைக்கும் போனார்கள்; அறிவாலயத்திலும் அமைச்சர்களின் காரை மறித்து ஆர்ப்பாட்டமும் செய்தார்கள். இதனால் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் அறிவிக்காமல் சஸ்பென்ஸில் வைத்தது தலைமை.

இந்த நிலையில், மோதிய இருவரையும் விட்டுவிட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை சங்கரன்கோவில் எம்எல்ஏ-வான ராஜாவுக்குக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. சங்கரன்கோவிலானது தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள் வருகிறது. ராஜாவை மாவட்டச் செயலாளர் ஆக்குவதற்காக அதை வடக்கு மாவட்ட எல்லைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே போட்டியில் இருந்த இருவரில் யாரை மாவட்டச் செயலாளர் ஆக்கினாலும் அவரை எதிர்த்து மற்றவர் கோஷ்டி அரசியல் நடத்துவார் என்பதால், கோதாவில் குதிக்காமல் பார்வையாளர் வரிசையில் இருந்த ராஜாவை பிடித்து மாவட்டச் செயலாளர் ஆக்கி இருக்கிறது அறிவாலயம். வெயிட் லிஃப்ட்டரான ராஜா இரண்டு கோஷ்டிகளையும் எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in