சிக்னல் எடப்பாடிக்கு... சிக்கல் பாண்டித்துரைக்கு!

சிக்னல் எடப்பாடிக்கு... சிக்கல்  பாண்டித்துரைக்கு!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை ஈபிஎஸ் தரப்புக்கு வைக்கப்பட்ட  செக் என்கிறார்கள். 

நெடுஞ்சாலைத்துறையில் ரோடு ரோலர் ஓட்டுநராகப் பணிபுரிந்த தனது தந்தை பணியின்போது இறந்ததால் கருணை அடிப்படையில் இளநிலை பொறியாளராகப்  பணியில் சேர்ந்தவர் பாண்டித்துரை. தொழிலில் தனது அசாத்திய திறமையால் தன்னை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இவர், அதிமுக ஆட்சியில் எடப்பாடி வட்டத்துக்கு மிக நெருக்கமான புள்ளியாக மாறினார். அதன் பலனாக, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் சாலை தடுப்பு, வர்ணங்கள் தீட்டுவது,  சைன் போர்டுகள் வைப்பது,  நியான் போர்டுகள்  அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக பாண்டித்துரைக்கு மட்டுமே பாக்யமானது. அப்படிப் பெறப்பட்ட காண்ட்ராக்ட்கள் மட்டுமே 5 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். சோதனையின் போது இவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 80 பெட்டிகளில் எடுத்துச் சென்று மலைக்கவைத்திருக்கிறது வருமான வரித்துறை.

பாண்டித்துரை
பாண்டித்துரை

தன்னை இப்படி வளப்படுத்திய எடப்பாடிக்கு தனது நன்றிக் கடனை ‘வளமாக’வே செலுத்தி இருக்கிறாராம் பாண்டித்துரை. இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தே பாண்டித்துரை வீட்டுக்கு விசிட் கொடுத்திருக்கிறது வருமான வரித்துறை. நியாயமாகப் பார்த்தால் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வேலையைச் செய்திருக்க வேண்டுமாம். ஆனால், அங்கேயும் அழகாக லாபிசெய்து வைத்திருந்தாராம் பாண்டித்துரை. இந்த நிலையில், அவரைக் கண்காணித்து வந்த வருமான வரித்துறை களத்தில் இறங்கிவிட்டது.

அதிமுக ஒருங்கிணைப்புக்காக ஈபிஎஸ்ஸை தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால், அவர் இன்னமும் பிடிகொடுக்காமல் இழுக்கிறார். அதனால், அவர் சம்பந்தப்பட்ட கிளைகளை காவாத்து செய்யத் தொடங்கி இருக்கிறது பாஜக. அதன் இன்னொரு அட்டாக் தான் பாண்டித்துரை மீதான ரெய்டு நடவடிக்கை என்கிறார்கள். காவாத்து இத்துடன் நிற்காது, அடுத்தடுத்த அட்டாக்கும் இருக்கும் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in