
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவில் இந்து சமய மாநாட்டை 80 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஹைந்தவ சேவா சங்கம்’ என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. ஆனால், இம்முறை அறநிலையத் துறையே இந்த மாநாட்டை நடத்தும் என மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். இது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
ஏற்கெனவே மதக் கலவரத்தால் ரத்தக்களறி ஆன பூமி மண்டைக்காடு என்பதால் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டது அரசு. இந்து அமைப்புகளை சமாதானப்படுத்த அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்தார் முதல்வர். மனோ தங்கராஜ் உள்ளிட்ட உள்ளூர் திமுகவினரை தவிர்த்துவிட்டு தான் மட்டும் தனியாளாக உட்கார்ந்து பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்தார் சேகர்பாபு. “இந்த ஆண்டு ஹைந்தவ சேவா சங்கமே அறநிலையத் துறையுடன் இணைந்து மாநாட்டை நடத்தும்” என அமைச்சர் சொன்னதால் இந்து அமைப்பினரும் பாஜகவினரும் கொண்டாட்டமானார்கள்.
இந்த நிலையில், இந்து சமய மாநாட்டுக்காக ஹைந்தவ சேவா சங்கமும், அறநிலையத்துறையும் இணைந்து அச்சடித்திருக்கும் நோட்டீஸில், தமிழிசை செளந்தர்ராஜன் தொடங்கி, பாஜக தலைவர் அண்ணாமலை பெயர் வரைக்கும் இருக்கிறது. அதேபோல் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி திமுக நிர்வாகிகள் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், மாவட்ட அமைச்சரான மனோ தங்கராஜின் பெயர் மிஸ்ஸிங். அதேபோல், நோட்டீஸில் பாஜகவினரை கட்சி அடைமொழியுடன் போட்டிருப்பவர்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினருக்கு கட்சி அடையாளத்தைத் தவிர்த்திருக்கிறார்கள்.
சமரச பேச்சுவார்த்தையின் போது, “அமைச்சர் மனோ தங்கராஜ் தான் அனைத்துக்கும் காரணம். அவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது” என்றெல்லாம் இந்து அமைப்பினர் சேகர்பாபுவிடம் முறையிட்டார்களாம். அதற்கு அவர் ஒத்துக்கொண்டாரா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத நிலையில் மனோவின் பெயரை தவிர்த்துவிட்டு நோட்டீஸ் வெளிவந்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது!