பலிக்குமா பெருந்தகையின் பெருங்கனவு?

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் பல ரூட்டில் ஆள்பிடித்துப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். சிலர் தங்களுக்குத் தெரிந்த டெல்லி லாபியை வைத்து காய்நகர்த்துகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையும் இப்போது தீவிரமாக தலைவர் பதவிக்காக முட்டி மோதுகிறாராம்.

பொதுவாக காங்கிரஸ் தலைமையில் பட்டியலினத்தலைவர்களுக்கென ஒரு தனி லாபி இருக்கும். அந்த ரூட்டில் தனக்கு தலைவர் பதவி சாத்தியமாகும் என காய்நகர்த்துகிறாராம் செல்வப்பெருந்தகை. ஆனால், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியும் கோபண்ணாவும் நகமும் சதையுமாக இருக்கிறார்கள். அதனால் தனது இடத்தில் கோபண்ணாவை அமர்த்தி அழகுபார்க்க ஆசைப்படுகிறாராம் அழகிரி. இதற்காக அவர் எடுத்த சில ரகசிய மூவ்களைப் பார்த்துவிட்டு, அழகிரிக்கு எதிரானவர்கள் செல்வப்பெருந்தகையைக் கொம்பு சீவுகிறார்களாம்.

அண்மையில் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.கே.வேணுகோபாலிடம் தனது விருப்பத்தைச் சூசகமாக தெரிவித்தாராம் பெருந்தகை. இவரை தலைவராக கொண்டு வருவதற்கு திமுக தரப்பிலும் சிலர் கைகொடுப்பதாக காங்கிரஸுக்குள்ளேயே காதைக்கடிகிறார்கள். பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் திமுக அரசுக்கு ஆதரவாக பெருந்தகை பேர் சொல்லும்படியா்க முழங்குவதற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

ஆனால், “என்னதான் இருந்தாலும் சட்டமன்றக் கட்சியின் தலைவராக இருக்கும் பெருந்தகைக்கு காங்கிரஸ் தலைவர் பதவியும் கைகூடி வருவதற்கு அவ்வளவாய் வாய்ப்பில்லை” என்றும் கட்சிக்குள்ளேயே சிலர் பெருந்தகையின் பெருங்கனவைக் கலைக்கிறார்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in