மூவர் இருந்தார்கள்... முக்கியமானவர் இல்லை!

மூவர் இருந்தார்கள்... முக்கியமானவர் இல்லை!

குமரி மாவட்ட திமுகவில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் தனித்துவிடப்பட்டிருப்பது குறித்து முன்பே காமதேனுவில் சொல்லி இருக்கிறோம். இவர் தனித்திருக்க, அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ். முன்னாள் எம்எல்ஏ-வான ஆஸ்டின் ஆகிய மூவரும் ஓரணியில் கைகோத்து நிற்கிறார்கள். இவர்களின் கைதான் குமரி திமுகவில் இப்போது சவுண்டாகவும் இருக்கிறது. இந்நிலையில், தென் மாநிலங் களுக்கான 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்காக கேரளம் வந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை கோவளத்தில் இந்த மூவருடனும் அமர்ந்து தேநீர் அருந்தினார். அவர்களிடம் வெகுநேரம் அளவளாவினார். ஆனால், இந்தக் கூடுகையில் சுரேஷ் ராஜன் மிஸ்ஸிங்!

அதனால் இந்தச் சந்திப்பை சுரேஷ் ராஜனின் எதிர்கோஷ்டியினர் பூரிப்புடன் இணையத்தில் வைரலாக்கினர். அதேசமயம், தமிழக முதல்வரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டு, அதில் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், சுரேஷ் ராஜன் ஆகியோர் முதல்வரை வரவேற்றதாக பதிவிடப்பட்டது. சுரேஷ் ராஜன் கோஷ்டி இதைச் சுட்டிக்காட்டி நெகிழ்ந்தது. ஒரு நேரம் பார்த்தால்... சுரேஷ் ராஜனை கட்சித் தலைமை ஒதுக்கிவைத்தது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது. இன்னொரு சமயத்தில்... அவருக்கான முக்கியத்துவம் எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை என்பது போல முதல்வர் தரப்பிலிருந்தே செய்தி பகிரப்படுகிறது. இதனால், யாரை நம்பி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் மதில் மேல் பூனையாகவே நிற்கிறார்கள் குமரி மாவட்ட உடன்பிறப்புகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in