
மேயருக்கான அங்கியுடன் உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து சர்ச்சையில் சிக்கியவர் தஞ்சை திமுக மேயர் சண்.ராமநாதன். ஆனால், அதற்குப் பிறகுதான் ராமநாதனுக்கு தஞ்சை மாநகர் திமுக செயலாளர் பதவி தேடிவந்தது. இதுபோதாதா... இப்போது முன்னைவிட வேகமாக உழைக்க ஆரம்பித்துவிட்டார் ராம்ஸ். தனது அன்றாடப் பணிகள் குறித்த நிகழ்ச்சி நிரலை தினமும் தனது முகநூல் பக்கத்தில் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு முத்திரைகள் சகிதம் வெளியிடுவார் ராமநாதன். அதன்படி இன்றைய நிகழ்ச்சி நிரலில் என்ன பதிவிட்டிருக்கிறார் தெரியுமா?
‘கழக இளம் தலைவரின் ‘கலகத் தலைவன்’ திரைப்பட முதல் காட்சியை இளைஞரணி தோழர்களுடன் காலை 10.30 மணி முதல் 1 மணிவரை காணுதல்’ என்கிறது ராமநாதனின் இன்றைய முத்திரை தாங்கிய முகநூல் பதிவு. காலையிலேயே இதைப் பார்த்துவிட்டு, ‘மேயரின் நிகழ்ச்சி நிரலில் சினிமா பார்ப்பதையெல்லாமா வெளியிடுவார்கள்?’ என சமூக வலைதளங்களில் பலரும் வாரிக்கொண்டிருக்கிறார்கள்.
“வெள்ளிக்கிழமையான இன்று காலையில் பொதுமக்கள் பலரும் கோரிக்கை மனுக்களுடன் மேயரைச் சந்திக்க மேயர் அலுவலகம் வருவார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தியேட்டருக்கு உதயநிதி படம் பார்க்கப் போயிருக்கிறார் மேயர்” என எதிர்க்கட்சிகளும் ரகளைகட்டி வருகின்றன.