மகனுக்கா... மருமகளுக்கா? - சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி
கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் பசையான பார்ட்டிகளை நிறுத்தினால் மட்டுமே தொகுதிகளை தக்கவைக்க முடியும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது ஆளும் திமுக. அதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஓசைப்படாமல் வேட்பாளர் தேர்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்த சில தொகுதிகளில் இம்முறை திமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன்பிறப்புகள் தரப்பிலிருந்து உரக்கக் கேட்கிறதாம்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

அந்த வகையில் கார்த்தி சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதியில் இம்முறை திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வந்திருக்கிறதாம். கார்த்தி சிதம்பரத்துக்கும் சிவகங்கை திமுகவுக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. இதை உள்வாங்கியதால்தானோ என்னவோ, “தொகுதி மாறி போட்டியிடுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று முற்போக்குச் சிந்தனையுடன் பேச ஆரம்பித்திருக்கிறார் கார்த்தி.

அதேசமயம், இந்தத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கும் பட்சத்தில் தனது மருமகளை வேட்பாளராக்க திட்டம் வகுக்கிறாராம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். இவருக்குப் போட்டியாக அமைச்சர் ரகுபதியும் தனது மகனுக்கு இந்தத் தொகுதியை வாங்கிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனிடையே, “இந்தத் தடவ சிவகங்கை தொகுதியை காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டாம்னு சொல்லுங்க” என்று சிவகங்கை தொகுதி திமுகவினர் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி என அனைத்துத் தரப்புக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in