கார்கே வந்தாலும் இப்படித்தான் கண்டுக்காம இருப்பீங்களா?

சத்தியமூர்த்தி பவனில் சசி தரூர்...
சத்தியமூர்த்தி பவனில் சசி தரூர்...

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் நேற்று தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வந்திருந்தார். தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என கட்சித் தலைமை உத்தரவு போட்டிருக்கிறது. இதனால் சசி தரூரை பகிரங்கமாக ஆதரிக்கும் கார்த்தி சிதம்பரமே சசிதரூரை வரவேற்க வரவில்லையாம்.

மாநில தலைவர் என்ற முறையில் சசிதரூரை மரியாதை நிமித்தம் வரவேற்க கே.எஸ்.அழகிரி வந்திருக்கலாமாம். ஆனால், அவரும் ஆள் எஸ்கேப். சசி தரூரை கார்த்தி சிதம்பரம் ஆதரிக்கிறார் என்றதுமே, ‘எதுக்கு வம்பு’ என பலரும் பைபாஸில் போய்விட்டார்களாம். தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற பிசிசி மெம்பர்கள் சுமார் 650 பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் 50 பேர்கூட சசிதரூரை வரவேற்க வரவில்லை என்கிறது அழகிரி தரப்பு.

அருள் பெத்தையா
அருள் பெத்தையா

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும் மாநில பொதுச்செயலாளர்களில் ஒருவருமான அருள் பெத்தையா அழகிரிக்கு எதிராக கேள்வி எழுப்பியிருக்கும் முகநூல் பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் இப்போது வைரலாகி வருகிறது. ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மிகவும் சாதுர்யமாக நடந்துகொண்டீர்கள். நான் தங்களிடம் பேசியதிலிருந்து, நீங்கள் பசுவுக்கு நீதி கிடைக்கப்பெற்ற மகனைக் கொன்ற மனுநீதிச் சோழன் போல் நீதியோடு செயல்படுகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். வேட்பாளர்கள் வந்தால் இதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் அனுகுமுறை என்று சசிதரூர் வருகையின் போது நடத்திக்காட்டினீர்கள். இதே அனுகுமுறை விரைவில் தமிழகம் வரவிருக்கும் திரு.கார்கே அவர்களுக்கும் பொருந்துமா..? பொருந்தாது இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ இப்படிப் போகிறது பெத்தையாவின் மெத்தப் பதிவு.

“அதெல்லாம் சரி... சசி தரூரை முந்திக்கொண்டு ஆதரித்த உங்காளு வந்திருக்கலாமே ராஜா?” என்று இளைய நிலா கார்த்தி சிதம்பரத்தின் பின்னால் இருக்கும் இளம் தம்பிகளைக் கேட்டால், “அவரு எங்க இங்க இருக்காரு... லண்டன் போயிருக்காருல்ல... எட்டாம் தேதிதான் வர்றாரு” என்று நீட்டி முழக்குகிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in