பாஜக வேட்பாளர் சசி தரூர் - பகீர் கிளப்பும் சிவகங்கை காங்கிரசார்!

பாஜக வேட்பாளர் சசி தரூர் - பகீர் கிளப்பும் சிவகங்கை காங்கிரசார்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூருக்கு தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். சசிதரூரை முன்மொழிந்த 60 பொதுக்குழு உறுப்பினர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாம். இதில் கார்த்தியை தவிர ஒருவர்கூட சிவகங்கை மாவட்டம் இல்லையாம். இந்த நிலையில் கார்த்தியின் பதிவை எதிர்த்து அவரது சிவகங்கை மாவட்ட காங்கிரஸிலேயே சிலர் கலகக் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் போர் தொடுத்திருக்கும் அவர்கள், ‘அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே அரை நூற்றாண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்கும் நேரு குடும்பத்திற்கும் விசுவாசமானவர். அந்த விசுவாசத்திற்கான பரிசாகத் தான் அவர் மத்திய ரயில்வே அமைச்சராக, மாநிலங்களவை தலைவராக பணியாற்றுகிற வாய்ப்பினைப் பெற்றார். அதனால் தான் இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். நாடாளுமன்றத்தில் மிகத் திறம்பட செயலாற்றினார் கார்கே. பாஜகவுக்கு எதிரான விவாதங்களில் திறம்பட வழிநடத்தினார். சிலர் எந்த பதவிக்கு வந்தாலும் அவர்களால் அந்தப் பதவிக்கோ கட்சிக்கோ பயன் இருக்காது. அவர்களுக்கு முழுமையான பயன் இருக்கும். அப்படிப்பட்டவர்களும் இப்போது களத்தில் இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மிகப்பெரிய வெற்றியை, மக்கள் ஆதரவைப் பெற்று வருகிற காரணத்தால் ஆளும் பாஜக அரண்டு போயிருக்கிறது. அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த சாமானியர்களின் பார்வையும் காங்கிரஸ் கட்சியின் பக்கம் திருப்பி இருக்கிறது.

நம்முடைய அன்புத் தலைவர் சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டதை போல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியை கடந்து பொதுமக்களை கடந்து, ஆளும் பிஜேபிக்கு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை இன்றைக்கு பாஜக தனது கைப்பாவை ஆக்கி காங்கிரஸ் தலைவருக்கான வேட்பாளர் ஆக்கியிருக்கிறது.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தின் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தன்னுடைய மாநில பொதுக் குழு உறுப்பினரை அனுகி மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு தங்களது வாக்கை பதிவு செய்யும்படி வலியுறுத்த வேண்டும். இதை ஒரு தொண்டர் இயக்கமாகவே மாற்றிட வேண்டும்’ என்று பதிவுகளைப் போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in