நெருங்கும் பாமக... விலகுமா விசிக?

ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர்...
ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர்...நெருங்கும் பாமக... விலகுமா விசிக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை ஆளுங்கட்சியான திமுக கவுரவப் பிரச்சினையாக கையில் எடுத்திருக்கிறது. அதற்காக காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டது. தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் ஓட்டுகள் உள்ளனவாம். அதை திமுக அணிக்குத் திருப்பவே, பாமகவை ‘யாருக்கும் ஆதரவில்லை’ நிலைப்பாட்டை எடுக்கவைத்தார்களாம். இதன் பின்னணியில் திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து மூத்த அமைச்சர் இருக்கிறாராம்.

இவை எல்லாமே 2024 மக்களவைத் தேர்தலில் பாமகவை திமுக கூட்டணிக்குள் இழுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்கிறார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாமக, விக்கிரவண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்தது. இப்படியெல்லாம் கடந்துவிட்டு, ‘இடைத் தேர்தல் நடத்துவதால் மக்களின் வரிப்பணம் தான் வீண்’ என இப்போது புது தினுசாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது பாமக. அறிக்கையைக் கொடுத்துவிட்டு, ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பாமகவை இப்படியெல்லாம் வழி நடத்தும் திமுக தரப்பு விசிகவை கொஞ்சம் தள்ளிவைக்கத் தொடங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பேச முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டாராம் திருமா. ஆனால், ஏனோ அதிகாரிகள் இழுத்தடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதன்பிறகு தான் வேங்கைவயல் விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய திருமா, “இது தேசத்திற்கு அவமானம்” என்றெல்லாம் கொந்தளித்தாராம். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in