பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பினராயி விஜயன்!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் விழிஞ்சம் பகுதியில் வர்த்தகத் துறைமுகப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. பாஜகவுக்கு மிகவும் நெருக்கமான அதானியின் நிறுவனமே இந்தப்பணிகளை எடுத்துச் செய்துவருகிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக விழிஞ்சம் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். உள்ளூர் பாதிரியார்களும் ஜமாத் நிர்வாகிகளும் கூட உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

மாநில அரசுக்கு வருவாய் கொடுக்கும் சமாச்சாரம் என்பதால் விழிஞ்சம் துறைமுகத்தை கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு விரும்புகிறது. இருப்பினும் பாஜகவுக்கு நெருக்கமான அதானி குழுமம் எடுத்துச் செய்யும் பணி என்பதால் போராட்டத்தை சற்று தள்ளி நின்றே வேடிக்கை பார்க்கிறது ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி. போராட்டக்காரர்களை ஒடுக்க மாநில அரசு முயலவேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் மார்க்சிஸ்ட்களே போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்களாம். போராட்டத்தை ஒடுக்க அரசு எவ்வித பலப்பிரயோகமும் செய்யாது என ஆளும்கட்சி தரப்பிலிருந்தே உத்தரவாதமும் தரப்படுவதால் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமெடுத்து வருகிறது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் பதில் சொல்வதற்காக போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது கேரள அரசு. மார்க்சிஸ்ட் மக்களின் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துவிட்டு, பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் பினராயி என்று கிண்டலடிக்கும் காங்கிரஸ்காரர்கள், யாத்திரை வரும் ராகுலை போராட்டக்களத்திற்கே அழைத்துவந்து அரசியல் செய்யவும் ஆயத்தமாகி வருகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in