தலைவர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைமை நம்பாதது, விரும்பாதது வியப்பளிக்கிறது!

கண்டனூரிலிருந்து கிளம்பி இருக்கும் ஆதங்கக் குரல்
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இந்தப் பதவிக்கு தமிழக காங்கிரஸார் ப.சிதம்பரத்தை சிபாரிசு செய்யாமல் விட்டு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டதாக சிதம்பரத்தின் விசுவாசிகள் சமூகவலைதளத்தில் கருத்துப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூரைச் சேர்ந்த அவரது விசுவாசியான அப்பாவு ராமசாமி என்பவர் இப்படியொரு பதிவை முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

- அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அன்புத் தலைவர் ப.சிதம்பரம் அவர்களை அகில இந்திய ஊடகங்கள் முன்மொழிந்த அளவுக்குக்கூட தமிழக காங்கிரஸார் முன்மொழியவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரக்கூடும் என்று அகில இந்திய ஊடகங்கள் கூட செய்திகளை வெளியிட்டன, ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது காழ்ப்புணர்ச்சியால் தலைவரின் பெயரை இருட்டடிப்பு செய்தனர். மேலும், அகில இந்திய தலைமையிடம் தலைவரின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பினர்; விமர்சனம் செய்தனர்.

நேரு குடும்பத்தைத் தவிர்த்து யார் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டாலும் அதை உண்மையான காங்கிரஸார் ஏற்கப்போவதில்லை. அவர்களின் தலைமையை தொடர்ந்து வலியுறுத்துவதே காங்கிரஸ் பேரியக்கத்தினரின் கடமை. ஆனால், நேரு குடும்பம் விட்டுக்கொடுக்கும் பதவியை தமிழன் பெற தகுதியில்லையா என்ற சாமான்ய தமிழ்நாட்டுக்காரனின் உணர்வை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்துவிட்டோம் என்பதை வரலாறு பழிக்கும்!

தங்களுடைய முதல் விரோதி ப.சிதம்பரம் என்பதை முழுமையாக உணர்ந்த காரணத்தினால்தான் அவர் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து அவரை அசிங்கப்படுத்தி சிறையில் அடைத்தது பாஜக அரசு. காரணம், பாஜக அரசின் பல தவறான திட்டங்களை வெளுத்து வாங்கி அரசின் திறமையின்மையும், மோடியின் தகுதியின்மையையும் அம்பலபடுத்தினார் தலைவர். பாஜக அரசை விமர்சித்துப் பேசியும், எழுதியும் வந்தார். இவற்றையெல்லாம் தாங்க முடியாமல் அவர் மீது உச்சபட்ச கோபம் கொண்டு ஒரு கொலைக்குற்றவாளியை சாட்சியாக வைத்துக் கொண்டு வழக்கை ஜோடித்து கைது செய்தனர்.100 நாட்களுக்கு மேல் விசாரணை கைதியாகவே சிறையில் வைத்தனர்.

அந்த சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையானது தலைவருக்கு சற்றே தயக்கத்துடன் ஆதரவுக்கரம் நீட்டியது. அமெரிக்கா போன்ற உலக பொருளாதார வல்லரசு நாடுகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோதும் கூட இந்திய பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வைத்திருந்து தனது நிர்வாக திறமையை உலகறிய செய்தவர் தலைவர் ப.சிதம்பரம். அவரால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலைமையை மறுசீரமைக்க முடியும் என காங்கிரஸ் தலைமை நம்பாதது, விரும்பாதது வியப்பாக இருக்கிறது!

ராஜ குடும்பத்தில் பிறந்து பெருந்செல்வந்தராக இருந்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்ததாலேயே சிறையில் அடைத்து அசிங்கப்படுத்தப்பட்டார் தலைவர் ப.சிதம்பரம். அவரது மகனாக இருந்ததாலேயே கார்த்தி பசிதம்பரமும் சிறையிலடைக்கப் பட்டார். இதற்கெல்லாம் காரணம், பாஜகவுக்கெதிரான தலைவரின் அரசியலே. அதற்கு பரிகாரமாக அவருக்கு அகில இந்திய தலைவர் பதவி வழங்கினால் பாஜகவுக்கு நேரடி சவாலாக அமையும் என்ற அரசியல் உத்தி தெரியாத இயக்கம் எப்படி வளரும்?

அசோக் கெலாட்டோ அல்லது சசி தரூரோ காங்கிரஸ் தலைவரானால் அந்தந்த மாநிலங்கள் கொண்டாடும். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அதையும் அண்ணாந்து வேடிக்கை பார்த்து நிற்ப்பர். தங்களது அறியாமையை அப்போதும் உணரமாட்டார்கள்.

காமராஜருக்குப் பிறகு ஒரு தமிழர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வருவதை ஆதரிக்காமல் தமிழக காங்கிரஸார் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார்கள். இது தமிழக காங்கிரஸ் வரலாற்றில் நிச்சயம் மன்னிக்க முடியாத ஒரு பிழையாகவே அமையும்.

- இப்படிப் போகிறது அப்பாவு ராமசாமியின் ஆதங்கப் பதிவு. சிதம்பர விசுவாசிகள் இதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வரும் நிலையில், சிதம்பர எதிர்ப்பாளர்கள் விமர்சனக் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in