
இடைத் தேர்தலில் ஆளும்கட்சி நடத்திய ‘கவனிப்பு மேளா’க்களைப் பார்த்துவிட்டு, “அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்கிறது கஷ்டம்தான் போலிருக்கே” என்று சென்னையில் இருக்கிறவர்களும் கருத்துக் கணிப்புச் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்டுவிட்டு, அதிமுக முகாமும் சற்றே கலவரப்பட்டுத்தான் போனது. ஒருவேளை, காப்புத் தொகை காவு போனால் அதற்கு ஓபிஎஸ்ஸும் உரிமை கொண்டாடுவாரே என அதிகம் பயந்தாராம் எடப்பாடியார்.
அந்தக் கவலைகளை எல்லாம் போக்கும் விதமாக கௌரவ தோல்வியைச் சந்தித்திருக்கிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. அவருக்கு 44 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என்பதை அதிமுகவினரே கணிக்கவில்லையாம். தேர்தல் முடிவுகளால் உற்சாக மோடில் இருக்கும் எடப்பாடியார், “சும்மா இல்ல... இந்த பழனிசாமி நிறுத்துற வேட்பாளரை ஜெயிக்கணும்னா 400 கோடி அவங்க செலவு பண்ணியாகணும். அப்படிச் செலவு பண்ணினாத்தான் ஜெயிக்க முடியும்கிற நிலையை இன்னிக்கு நாம் உருவாக்கி இருக்கோம். அதுவே நமக்கு சக்சஸ் தான் போங்க” என்று தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் பெருமக்களிடம் முகம்மலர்ந்து சொன்னாராம்.