“உங்களுக்கு நவம்பருக்குள் முதல்வர் ஆகும் யோகம் இருக்கு” என்று தனது ஆஸ்தான ஆன்மிக குரு சொன்னதால் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறாராம் புதுச்சேரி உள்துறை அமைச்சரான பாஜகவின் நமச்சிவாயம். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாகவே இருக்கிறாராம். அதேசமயம், புதுச்சேரி அரசில் கலகம் செய்யும் வேலையை அவரது ஆதரவாளர்கள் பக்காவாய் செய்துகொண்டிருக் கிறார்கள். அந்த அஜெண்டாவின் ஒருபகுதியாகத்தான், பாஜக நிழலில் இருக்கும் சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அனலைக் கக்கினாராம். இதன் பின்னணியில் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், “தெம்பிருந்தால் பாஜக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கட்டுமே” என்று நேரடியாகவே பாஜகவுடன் மோதினார்கள்.
இதனால், ஆளும் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தான் பாஜகவும் எதிர்பார்த்தது. இதையடுத்து, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடமும் நமச்சிவாயத்திடமும் இன்று மதியம் மனு கொடுத்தது ரங்கசாமி தரப்பு. இருவரும் ரங்கசாமி தரப்பை சமாதானப்படுத்தியதுடன், “இனிமேல் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்... நீங்களும் எதுவும் பேசவேண்டாம்” என பிரச்சினைக்கு தற்காலிகமாக கமா போட்டார்களாம். இருப்பினும் புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே நீடிக்கிறது. அதேசமயம், அங்கே இன்னொரு பிரச்சினை வெடித்தால் அதில் நேரடியாகவே பாஜகவின் பங்கிருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் நகர்வுகளை அறிந்தவர்கள்.