ஆடியோ ரிலீஸ் செய்தவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி!

ஓபிஎஸ்ஸுடன் கோலப்பன்
ஓபிஎஸ்ஸுடன் கோலப்பன்

பொன்னையனுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு ஒரேநாளில் வைரல் ஆனவர் நாஞ்சில் கோலப்பன். “அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை” என பொன்னையன் மறுத்தாலும், அது ஈபிஎஸ் தரப்பை அப்போது ரொம்பவே தர்மசங்கடப்படுத்தியது. அப்பேற்பட்ட கோலப்பனை தனது அணிக்கான அமைப்புச் செயலாளராக அங்கீகரித்திருக்கிறார் ஓபிஎஸ்.

அமைப்பு செயலாளர் ஆன பிறகு இன்று நாகர்கோவிலுக்கு முதன்முதலாக வருகை தந்த நாஞ்சில் கோலப்பன், வடசேரி பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலையெல்லாம் அணிவித்து அமர்க்களப்படுத்தினார். ’ஓபிஎஸ் ஆசியோடு தான் சொந்த மண்ணுக்கு வருகிறேன். எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள், அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் வாருங்கள்’ என கோலப்பருக்காக விளம்பரமெல்லாம் விறுவிறுத்தன.

வடசேரி வரவேற்பில் நாஞ்சில் கோலப்பன்...
வடசேரி வரவேற்பில் நாஞ்சில் கோலப்பன்...

ஆனாலும் ஓபிஎஸ் அணிக்கான குமரி மாவட்டச் செயலாளர் அசோகன், நாஞ்சில் கோலப்பனை கண்டுகொள்ளவே இல்லை. அவருக்காக காத்திருந்து சோர்ந்துபோன கோலப்பனார், ஒருவழியாக தாமாகவே வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். “மாவட்டச் செயலாளர் வரவில்லையே” என செய்தியாளர்கள் கிண்டியதற்கு, “அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார். அண்ணன் கையெழுத்துக்கு மரியாதை கொடுத்து வந்திருக்க வேண்டும். போனில்கூட வாழ்த்துச் சொல்லவில்லை. எங்கிருந்தாலும் மனதால் நிச்சயம் என்னை வாழ்த்தியிருப்பார்” எனச்சொல்லி சமாளித்தார்.

இந்தக் கூத்துகளை எல்லாம் பார்த்துவிட்டு, “ஓபிஎஸ் பின்னாடி இருக்குறதே ஊருக்கு நாலு பேரு... அதுலயும் நாலு கோஷ்டியா?” என சமூக வலைதளங்களில் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது ஈபிஎஸ் கோஷ்டி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in