
மூத்த காங்கிரஸ்காரரான குமரி அனந்தனுக்கு அண்மையில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கிக் கொடுத்தது தமிழக அரசு. இந்த விவகாரம் அவரது குடும்பத்துக்குள் இப்போது வேறு மாதிரியான சலசலப்பை உண்டாக்கி இருக்கிறதாம். தனது தந்தைக்கு வீடு கொடுத்த விவகாரம் தனக்கே ஒரு செய்தியாகத்தான் தெரியும் என சங்கடப்பட்டிருந்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
இந்நிலையில், எண்பதுக்கும் அதிகமான கிளைகளைப் பரப்பி இருக்கும் வசந்த் அண்ட் கோ உரிமையாளரும் கன்னியாகுமரி எம்பி-யுமான விஜய் வசந்தும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதுபற்றி வருத்தப்பட்டுப் பேசினாராம். “யாரெல்லாமோ வீடு வேண்டும், வேலை வேண்டும் என எங்கள் குடும்பத்தைத் தேடி வருகிறார்கள். பெரியப்பாவுக்கு சென்னையில் வீடு வேண்டும் என்றால் அக்காவிடமே (தமிழிசை) கேட்டிருக்கலாம். அல்லது என்னைப் போன்ற குடும்ப உறவுகளிடம் கேட்டாலே நடந்திருக்கும். அப்படிக் கேட்காமல் அரசாங்கத்திடம் வீடு வாங்கியதுதான் சங்கடமா இருக்கு” என வேதனைப்பட்டாரம் விஜய் வசந்த். “குமரி அனந்தனுக்கு வீடு வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. ஆனால், திராவிட மாடல் அரசின் சாதனைக்காக இப்படி அவரையும் அந்தக் குடும்பத்தையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்” என்றும் அனந்தனுக்கு வேண்டப்பட்டவர்கள் ஆதங்கப்படுகிறார்களாம்.