டிஎஸ்பி-யை வறுத்தெடுத்த திமுக எம்பி?

ராஜேஸ்குமார்
ராஜேஸ்குமார்

நாமக்கல் டிஎஸ்பி-யான சுரேஷ்குமாரை திமுக எம்பி-யான ராஜேஸ்குமார் நேரில் வரவழைத்து வறுத்தெடுத்த விவகாரம் தான் இப்போது நாமக்கல் காவல் துறை வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. வறுத்தது எதற்காக தெரியுமா? மேற்கொண்டு படியுங்கள்...

தமிழகம் முழுவதுமே ‘டாஸ்மாக் பார்’களை வழக்கம் போல் இப்போது, ஆளும் கட்சியினரும் அவர்களுக்கு அனுசரணையானவர்களுமே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, வழக்கமான கடை திறப்பு நேரத்து வருமானத்தை விட டாஸ்மாக் கடைகள் அடைத்திருக்கும் நேரத்தில் ‘பிளாக்’கில் சரக்கு ஓட்டுவதில் தான் வருமானம் கொட்டுகிறது. நாமக்கல் மாவட்ட பார் பார்ட்டிகள் பலரும் இந்த பிசினஸில் வளமாகவே கல்லாக்கட்டி வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் காவல் துறையினருக்குத் தெரிந்தே இந்த பிசினஸ் நடக்கிறது என்றாலும், நாமக்கல் காவல் துறையினர் இந்த விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருந்து ’பிளாக்’ பார்ட்டிகள் மீது வழக்குகளைப் பாய்ச்சினார்களாம். இதனால் கடுப்பான ‘பிளாக்’ பார்ட்டிகள், விஷயத்தை தங்களது எம்பி-யான ராஜேஸ்குமாரின் காதுக்குக் கொண்டுபோனார்களாம். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் ராஜேஸ்குமார் இருப்பதால் ‘பிளாக்’ பார்ட்டிகளின் கவலைக்கு உரிய பரிகாரம் தேடுவதாக உத்தரவாதம் அளித்தாராம்.

இதனைத் தொடர்ந்து, “நம்மாளுங்க தான்... நீக்குப் போக்கா நடந்துக்குங்க” என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டதாம். அதேபோல், “போலீஸ் பிரச்சினை வராத அளவுக்குப் பாத்துக்குங்கப்பா” என்று ‘பிளாக்’ பார்ட்டிகளுக்கும் எம்பி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால், இத்தனைக்கும் பிறகும் நாமக்கல் காவல் துறை, தனது ‘கடமையை’க் கச்சியதமாகச் செய்ததாம்.

இதில் டென்ஷனானதால் தான், நாமக்கல் டிஎஸ்பி-யான சுரேஷ்குமாரை தனது அலுவலகத்துக்கு வரவைத்தாராம் எம்பி. அழைத்ததும் வந்தவரிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்ட எம்பி, “இனிமேலாச்சும் பிரச்சினை வராம பாத்துக்கோங்க” என்று அட்வைஸ் செய்து அனுப்பினாராம். கூடுதலாக அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை... எம்பி அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த டிஎஸ்பி, வாசலில் நின்ற தனது ஜீப்பில் கையால் ஓங்கிக் குத்திவிட்டு கடுப்புடன் புறப்பட்டுச் சென்றதாகக் காவல் துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in