நெல்லை மேயரை மாற்றாதே; மிரட்டும் வெள்ளாளர் சமூகம்!

மேயர் இருக்கையில் சரவணன்...
மேயர் இருக்கையில் சரவணன்...
Updated on
1 min read

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான அப்துல் வகாப்பால் நெல்லை மேயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர் சரவணன். ஆனால், மேயர் இருக்கையைப் பிடித்ததும் வகாப்பை கண்டுகொள்ளாமல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார் சரவணன். இதனால் அவருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்களைக் கொம்பு சீவியது வகாப் தரப்பு. இதனால், மாமன்றக் கூட்டத்தில் ஆளும் கட்சிக் கவுன்சிலர்களைச் சமாளிப்பதே சரவணனுக்குப் பெரும் பாடாகிப் போனது.

இந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் 35 பேர் டெம்போ டிராவலர் பிடித்து திருச்சி சென்று அமைச்சர் கே.என்.நேருவிடம் சரவணனுக்கு எதிராக புகார் வாசித்தனர். “ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார் நேரு.

சரவணனுக்கு எதிராக இப்படி எல்லாம் சதிவேலைகள் நடப்பதை அறிந்த அவர் சார்ந்த வெள்ளாளர் சமூகத்தினர் சரவணனுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம் நடத்தினர். இதில் முத்தாய்ப்பாக பிள்ளைமார் அமைப்புகள் சில சேர்ந்து மேயரை மாற்றினால் போராட்டத்தில் குதிப்போம் என மிரட்டும் தொனியில் போஸ்டர் ஒட்டியது. சாதி ரீதியிலான இந்த எதிர்ப்பை சமாளிக்க வழி தெரியாமல் இந்த விஷயத்தை சற்றே ஆறப்போட்டிருக்கிறதாம் திமுக தலைமை. இதற்கு நடுவே தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் மேயர் சரவணன், வகாப் ஆட்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல்வரிடம் முறையிடப் போகிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in