எல்லை தாண்டிய ராஜா... எகிடு தகிடாக பேசிய அமைச்சர் தரப்பு!

எஸ்.ஆர்.ராஜா
எஸ்.ஆர்.ராஜா

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒரு அணியாகவும் தாம்பரம் எம்எல்ஏ-வான எஸ்.ஆர்.ராஜா அவருக்கு எதிர் அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், செங்கல்பட்டு தொகுதிக்குள் வரும் மறைமலைநகரில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றின் பாதை தகராறு பஞ்சாயத்துக்காக அண்மையில் போயிருக்கிறார் எஸ்.ஆர்.ராஜா. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார் ராஜா. அப்போது நிர்வாக தரப்பைச் சேர்ந்த (இவரும் திமுக தான்) ஒருவருக்கும் ராஜாவுக்கும் பேச்சுவார்த்தை தடித்துப் போனதாம்.

“சாயங்காலத்துக்குள்ள கம்பெனியை இழுத்து மூடிடுவேன்” என எஸ்.ஆர்.ராஜா மிரட்ட, எதிர்பார்ட்டி “முடிஞ்சா கம்பெனியை இழுத்து மூடுங்க பார்க்கலாம்” எனச் சவால் விட்டிருக்கிறார். அசராத ராஜா, “நீ சிங்கப்பெருமாள் கோவில் ஆளு... நீ யார்னு தெரிஞ்சுதான் உள்ள வந்திருக்கேன்” என மிரட்டி இருக்கிறார். அசராத எதிர்பார்ட்டியும், “ஓட்டுப் போட்ட கட்சி ஆளுங்களுக்கே நீங்க மரியாதை கொடுக்கல... ஒரு கட்சிப் பிரதிநிதியை மிரட்ட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று எகிற, அடுத்தகட்டமாக வார்த்தைகள் இன்னும் தடித்து, “கையைக் காலை ஒடிப்பேன்” என்கிற அளவுக்குப் போயிருக்கிறது. இந்த சம்பாஷனைகள் அனைத்தும் பக்காவாய் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. அதை அப்படியே எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பி வைரலாக்கிவிட்டார்கள்.

அமைச்சர் அன்பரசன் அணியில் செங்கல்பட்டு எம்எல்ஏ-வான வரலட்சுமியின் கணவர் மதுசூதனன் இருக்கிறார். மதுசூதனன் ஏரியாவில் தாம்பரம் எம்எல்ஏ எல்லை தாண்டி பஞ்சாயத்துக்கு வந்ததால்தான் பிரச்சினையாம். அதனால் தான் எம்எல்ஏ என்றுகூட பாராமல் எகிடு தகிடாகப் பேசிவிட்டார்களாம். இதன் பின்னணியில் அமைச்சர் தரப்பினரின் கைங்கர்யமும் இருப்பதாகப் பல்லைக் கடிக்கிறதாம் ராஜா தரப்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in