ஸ்டாலினை வரவேற்ற பேனரில் ரவுடியின் படம்!

ஸ்டாலினை வரவேற்ற பேனரில் ரவுடியின் படம்!

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா. இவர் மீது கொலை, கொலை முயற்சி என ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உண்டு. தலைமறைவு குற்றவாளியாக இருந்த சூர்யா, 2020 அதிமுக ஆட்சியில் அப்போதைய பாஜக தலைவர் முருகன் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பாஜக துண்டு போட்டு பளிச்சென பிரசன்னமானார். அதனால் அந்த சமயத்தில் சூர்யாவை போலீஸாரால் கைவைக்கமுடியவில்லை. ஆனால், ஆட்சி மாறியதும் ஆளை அலேக்காக தூக்கி உள்ளே போட்டவர்கள், சூர்யா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தையும் பாய்ச்சினார்கள். தற்போது சிறையில் இருந்தாலும் வெளியில் தனது ஆதரவாளர்கள் மூலம் தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டிருக்கிறாராம் சூர்யா.

சூர்யா
சூர்யா

பாஜகவில் இருக்கும் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி நெடுங்குன்றம் ஊராட்சி கவுன்சிலராக போட்டியின்றி தேர்வானார். துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் போலீஸ் கைதுசெய்தது. அப்படியும் சிறைக்குள் இருந்தபடியே துணைத் தலைவரானார் விஜயலட்சுமி.

இந்நிலையில், செங்கல்பட்டு மஹிந்திராசிட்டியில் செல்போன் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அவரை வரவேற்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் சார்பில் பேனர்கள் வரிசைகட்டி நின்றன. அதில், ரவுடி சூர்யாவின் படத்தோடு கூடிய பேனர்களையும் வைத்திருந்தாராம். இதைப் பார்த்துவிட்டுப் பதறிய உளவுத்துறையினர், அமைச்சர் அன்பரசனின் காதில் விஷயத்தைப் போட்டிருக்கிறார்கள். அவர்களை விட கூடுதலாக அலறிய அன்பரசன், “ஏற்கெனவே சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போச்சுன்னு பாஜககாரன் குதிக்கிறான். இது வேறயா… மொதல்ல அந்த பேனர்களை எடுங்கப்பா” என்று கட்சியினருக்கு கட்டளையிட்டாராம். இதையடுத்து, முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக சூர்யா சம்பந்தப்பட்ட பேனர்களை அவசர அவசரமாக அங்கிருந்து தூக்கினார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in