பகுத்தறிவு பேசும் கட்சிக்கும் பயமா?

பகுத்தறிவு பேசும் கட்சிக்கும் பயமா?
(கோப்பு படம்)

ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் தஞ்சையில் ஆண்டு தோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் சதய விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். ஆனால் நேற்று, தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள ராஜராஜ சோழனின் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் யாரும் மரியாதை செலுத்தாதது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சதய விழா அழைப்பிதழில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தஞ்சையின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதுவும் ஏனோ ரத்தானது. அதேசமயம், சாமிநாதனும் அன்பில் மகேஷும் கும்பகோணம் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜராஜ சோழனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தாலோ அல்லது தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்தாலோ பதவிக்கு பங்கம் வரும் என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. அந்த பயத்தாலோ என்னவோ பகுத்தறிவு பேசும் திமுகவும் ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தாமல் தவிர்த்துள்ளது. இதை சர்ச்சையாக்கி வரும் தமிழ் ஆர்வலர்கள், “பேருக்கு அரசு விழாவாக அறிவித்துவிட்டு, ராஜராஜ சோழன் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in