அதனால் தான் அத்தனை பேருக்கும் நானே வழங்குகிறேன்!

ரகுபதி
ரகுபதி

தனது திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தானே நேரில் சென்று, அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. பேருக்கு ஒன்றிரண்டு பேருக்கு வழங்கிவிட்டுப் போவதாக இல்லாமல் கடைசி மாணவன் வரைக்கும் கால் வலிக்க நின்று மிதிவண்டிகளை வழங்குகிறாராம் அமைச்சர். “அடையாளமா ஒன்றிரண்டு பேருக்கு கொடுத்துட்டுப் போனால் போதாதா... மற்றவர்களுக்கு அதிகாரிகள் கொடுக்கமாட்டார்களா?” என ஆதரவாளர்கள் கேட்டபோது தான் அந்த ரகசியத்தைச் சொன்னாராம் ரகுபதி. கடந்த ஆட்சியில் ஒரு பள்ளியில் மிதிவண்டி வழங்க அப்போது எம்எல்ஏ-வாக இருந்த ரகுபதிக்கு அழைப்பு வந்ததாம். அதற்காக நேரத்தே அவர் அந்தப் பள்ளிக்குச் சென்றுவிட்ட போதிலும் மாலை வரை மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் வரவில்லையாம். அதிகாரிகள் வருகைக்காக ரகுபதி காத்திருந்ததோடு மட்டுமல்லாது மாணவர்களும் மணிக் கணக்கில் தவம் கிடந்தார்களாம். அப்படியெல்லாம் மாணவர்களைக் காக்கவைக்கக்கூடாது என்பதற்காகவும், தான் போனபிறகு மற்றவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்திவிடக்கூடாது என்பதற்காகவுமே குறித்த நேரத்துக்கு ஆஜராகி கடைசி மாணவன் வரைக்கும் மிதிவண்டியை தனது கையால் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னாராம் ரகுபதி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in