கண்ணை உறுத்தாமல் கதிரவனைக் கட்சிக்குள் கொண்டு வந்த எம்.ஆர்.கே!

கதிரவன்
கதிரவன்

கடந்த மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக ரமேஷை நிறுத்தியது திமுக. இவரை நிறுத்துவது தொடர்பாக மாவட்டத்தின் தற்போதைய அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தைக்கூட சரிவர கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது தலைமை. இந்த நிலையில் கொலை வழக்கில் சிக்கிய ரமேஷ் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்யுமளவுக்குப் போனது. இதனால் மீண்டும் ரமேஷ் களத்துக்குவர வாய்ப்பில்லை என்பதால் தனது மகன் கதிரவனை கடலூர் எம்பி தொகுதிக்கான அடுத்த வேட்பாளராக தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார் எம்.ஆர்.கே.

கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாதபோதும் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சுகவீனமடைந்த தந்தையின் கட்சி சுமைகளை தானே தூக்கிச் சுமந்தார் கதிரவன். தேர்தல் பணிகள்  அனைத்தையும் இவரே முன்னின்று கவனித்தார். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் கதிரவன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது கடலூர் கிழக்கு மாவட்ட திமுக. அப்போது கதிரவன் கைகாட்டியவர்களே பெரும்பாலும் வேட்பாளர்கள் ஆனார்கள். இப்படியெல்லாம் மகனை மற்றவர்களுக்கு கண்ணை உறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி நடவடிக்கைகளுக்குள் கொண்டு வந்த எம்.ஆர்.கே. இப்போது, தான் மாவட்டச் செயலாளராக இருக்கும் கடலூர் கிழக்கு மாவட்டத்துக்கு மகனை பொருளாளராகவும் ஆக்கிவிட்டார். இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் எம்.ஆர்.கே. கம் கதிரவன் விசுவாசிகள், “ நம்ம இளைய வேங்கை கதிரவன் தான் கடலூர் தொகுதிக்கு அடுத்த எம்பி” என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in