
திமுக முதன்மைச் செயலாளரான சீனியர் அமைச்சர் கே.என். நேருவுக்கும், ஜூனியர் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையில் நடக்கும் மறைமுக மல்யுத்தம் ஊரறிந்த ரகசியம்.
திருச்சியில் மட்டுமே நடந்து கொண்டிருந்த இந்த குஸ்தி இப்போது ஈரோட்டிலும் அரங்கேறி இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அன்னை சத்யா நகர், சூரியம்பாளையம் ஆகிய இரண்டு ஏரியாக்கள் அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரண்டு வார்டுகளுமே அதிமுக வென்ற வார்டுகள். அதைக் கவனமாக செலக்ட் செய்து. ‘முடிந்தால் முட்டிப்பார்’ என மகேஷ் தலையில் கட்டிவிட்டாராம் நேரு. ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தலைப் போலவே இப்போதும் அதிமுகவே இந்த வார்டுகளில் கொடிநாட்டினால் அதை வைத்து மகேஷுக்கு விளையாட்டுக் காட்டலாம் என்பதும் இதற்குள் இருக்கும் சூத்திரம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட மகேஷ், அந்த இரண்டு வார்டுகளை விட்டு எங்கும் போகாமல் மக்களோடு மக்களாக இருந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறாராம். இது மகேஷுக்கு நேரு வைத்த டெஸ்ட்டா அல்லது நேருவிட்டு மகேஷ் கொடுத்த ட்விஸ்ட்டா என்பது வாக்குப் பெட்டியைத் திறக்கும் போதுதான் தெரியும்!