ஏமாற்றத்தில் இருக்கிறாரா எ.வ.வேலு?

ஏமாற்றத்தில் இருக்கிறாரா எ.வ.வேலு?

மாற்று முகாமிலிருந்து வந்தவர் என்றாலும் கருணாநிதி குடும்பத்தின் மீது ஆகப்பெரும் பற்றுடன் இருப்பவர் அமைச்சர் எ.வ.வேலு. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தின் குறிப்பறிந்து அவர்களுக்கு எங்கெல்லாம் எதெல்லாம் தேவை இருக்குமோ அதையெல்லாம் அச்சரம் பிசகாமல் செய்து கொடுப்பவர் வேலு என்பார்கள். அப்படிப்பட்ட மனிதர் இப்போது வாட்டத்தில் இருக்கிறாராம்.

எதிர்கட்சியாக இருந்த போது கட்சி தொடர்பான நிகழ்வுகளை தனது ‘பொறுப்பாக’ கவனித்துக்கொண்ட வேலுவுக்கு கட்சி பொருளாளர் பதவி மீது கண் இருந்தது. ஸ்டாலின் அந்தப் பதவியிலிருந்து விலகி தலைவரானதும் தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் வேலு. ஆனால், சீனியர் என்ற முறையில் துரைமுருகனை பொருளாளர் ஆக்கிவிட்டார் ஸ்டாலின். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனபிறகாவது பொருளாளர் தனக்குக் கிட்டும் என நினைத்த வேலுவுக்கு அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது. துரைமுருகன் இடத்தில் அடுத்த சீனியரான டி.ஆர்.பாலு வந்து உட்கார்ந்துவிட்டார்.

இந்தத் தேர்தலிலாவது தனக்கு தலைமைக் கழகத்தில் முக்கிய பதவி கிடைக்கும் என வேலு தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந் தாராம். ஆனாலும் அவருக்கு ஏமாற்றமே. தன்னோடு கூட இருந்த ஆ.ராசாவும் பொன்முடியும் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அவர்களோடு சேர்த்து தனக்கும் இம்முறை துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாராம் வேலு. ஆனால், அது நடக்கவில்லை என்பதில் அவர் அப்செட் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலுவுக்கு சவாலாக அரசியல் செய்பவர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி. வேலு எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற நிலையில், பிச்சாண்டி இம்முறை திமுக தணிக்கைக்குழு உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் சொல்லியாகவேண்டி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in