இவரா இந்து விரோதி? - மடக்கும் மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள்

ஈஷா விழாவில் ஜக்கியுடன் அமைச்சர் மனோ தங்கராஜ்
ஈஷா விழாவில் ஜக்கியுடன் அமைச்சர் மனோ தங்கராஜ்

கிறிஸ்தவரான அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக, ’இந்து விரோதி’ என்ற அஸ்திரத்தை தொடர்ச்சியாக எடுத்து வீசிக்கொண்டே இருக்கிறது குமரி மாவட்ட பாஜக. ஆனால், அதையெல்லாம் தனது சாதுர்யத்தால் வீழ்த்திக்கொண்டே இருக்கிறார் மனோ.

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த விழாவின் ஒரு அங்கமாக ‘இந்து சேவா சங்கம்’ என்ற பெயரில் கடந்த 85 ஆண்டுகளாக சமய மாநாட்டை நடத்தி வந்தார்கள். 86-வது ஆண்டாக இம்முறையும் இம்மாநாடு நடப்பதாக நோட்டீஸ் விநியோகித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்வோர் பட்டியலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தொடங்கி, பாஜக எம்எல்ஏ-க்கள் பெயர் மட்டுமே இருந்தது.

இந்நிலையில், மனோ தங்கராஜின் பரிபூரண ஆசியுடன் இம்முறை சமய மாநாட்டை அறநிலையத் துறையே நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் சமய மாநாடு என்ற பெயரில் தனியார் அமைப்புகள் சில நிதி பிரிக்கின்றன எனவும் கொளுத்திப் போட்டனர் திமுகவினர். இதையடுத்து, ‘இந்து விரோதி’ என்ற அஸ்திரம் மனோ தங்கராஜுக்கு எதிராக மீண்டும் எடுத்து வீசப்பட்டது. இதற்கும் பதிலடி கொடுத்த திமுகவினர், ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘இவரா இந்து விரோதி மக்களே’ என கேட்காமல் கேட்டுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாஜக முகாம், மனோவுக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in