
கும்பகோணம் மாமன்ற உறுப்பினராக இருப்பவர் அசோக்குமார். இவர் குடந்தை தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி காயத்ரி கும்பகோணம் யூனியன் சேர்மன். அசோக்குமாருக்கும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரான எஸ்.கல்யாணசுந்தரத்துக்கும் அண்மைக் காலமாக அவ்வளவாய் ஆகவில்லை. சமயம் பார்த்திருந்த கல்யாணசுந்தரம், இந்தத் தேர்தலில் அசோக்குமாரின் ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்டுவைத்துவிட்டாராம். அத்துடன், அசோக்குமார் இருந்த பதவியில் தனது மகன் முத்துச்செல்வனை உட்காரவைத்துவிட்டாராம்.
இதனால் அதிருப்திடைந்த அசோக்குமார், அதிமுக, பாஜக என இரண்டு பக்கமும் தூது அனுப்பினாராம். முக்கிய பதவியைத் தந்து அசோக்குமாரை அரவணைத்துக்கொள்ள இரண்டு கட்சிகளுமே பேச்சுவார்த்தை நடத்தியதாம். இந்த தகவல் திமுக தலைமை வரை பறக்க, பொதுக்குழு உறுப்பினர் பதவியைக் கொடுத்து அசோக்குமாரை ஆஃப் செய்துவிட்டார்களாம். ஆனாலும், அடுத்த ஆஃபர் அமைவதற்காக அசோக்குமார் காத்துக்கொண்டிருப்பதாக குடந்தை திமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.